தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அச்சமயத்தில் இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தி இருந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டங்களை நடத்தின. இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், சுமார் 6 ஆண்டு விசாரணைக்குப் பிறகு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி மாலை 04.00 மணியளவில் தீர்ப்பு வழங்கினார்.
அதில், “ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் அடித்ததால் தான் அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்டுள்ளது என்பது ஊர்ஜிதம் ஆகிறது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அடிக்கச் சொன்னதால் தான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது” என்று கூறி தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை இன்று (06-04-26) நீதிபதி முத்துக்குமரன் வழங்கினார். அப்போது நீதிபதி தெரிவித்ததாவது, “காவல் நிலைய மரணங்கள் மிகவும் கொடியது. எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களைக் காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். நீதிமன்றம் தலையிடாவிட்டால் தந்தை, மகன் உடலுடன் உண்மையும் அடக்கம் செய்யப்பட்டிருக்கும். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கலாம் என ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் வைத்து தந்தை, மகன் என இருவரும் சித்ரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளனர். பென்னிக்ஸ், ஜெயராஜை இரக்கமின்றி அடித்ததை கொடூர செயலாகவே கருத வேண்டும். பழிவாங்கும் நோக்கத்துடன் இருவரும் அடித்துக் கொல்லப்பட்டுள்ளனர். தந்தை மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டது நிரூபணமாகியுள்ளது.
தந்தை, மகன் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வேலியே பயிரை மேய்ந்து போலீசார் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். குற்றவாளிகளுக்கு குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டும் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. சமூகத்தில் நல்ல அந்தஸ்த்தில் இருந்த 2 வியாபாரிகள் மீதும் எந்த குற்ற வழக்கும் இல்லை. சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்றம் புரிந்துள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் நிர்வாணப்படுத்தி மனம் போன போக்கில் தாக்கியுள்ளனர். குற்றம் தொடர்பான தரவுகளை வாசிக்கும்போது மனம் பதைபதைக்கிறது. இந்த வழக்கில் மரண தண்டனை விதிப்பதே சரியானது. மரண தண்டனைதான் வழங்க வேண்டுமா? என்பதையும் ஆலோசிக்க வேண்டியுள்ளது. ஆயுள் தண்டனை வழங்கினால் காவல்துறையினருக்கு அச்சத்தை ஏற்படுத்தாது. ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேரே பிடுங்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் மரணம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தீர்ப்பு இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் இதுபோல குற்றம் நடக்காத வண்ணம் தண்டனை இருக்க வேண்டும் என நீதிமன்றம் நினைக்கிறது. பொருளாதார ரீதியிலான தண்டனையும் வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது என கருதுகிறேன்” என்று கூறி காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகிய 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு அதிரடியாக தீர்ப்பளித்தார். மேலும், காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையுடன் ரூ.15 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
