நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு; காதலன் சரணடைய 4 வார கெடு

தென்னிந்தியத் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பிரதியுஷாவின் மரண வழக்கில், தற் கொலைக்குத் துாண்டிய குற்றத்திற்காக அவரது காதலன் சித்தார்த் ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உறுதி செய்ததுடன், அடுத்த நான்கு வாரங்களுக்குள் அவர் சரணடைய வேண்டும் எனவும் உத்தர விட்டனர்.

சிறை தண்டனை

தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் பிரபல நடிகையாக இருந்தவர் பிரதியுஷா, 20.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர், தமிழில் மனுநீதி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தவசி, கடல்பூக்கள் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தன் காதலன் சித்தார்த் ரெட்டியுடன் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.

இதில், பிரதியுஷா உயிரிழந்த நிலையில், சித்தார்த் ரெட்டி உயிர் பிழைத்தார். இவர்களது காதலுக்கு சித்தார்த்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததே இந்தத் தற்கொலை முடிவுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், ஹைதராபாத் விசாரணை நீதிமன்றம், 2004ம் ஆண்டு சித்தார்த் ரெட்டிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பை எதிர்த்து, 2011ம் ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சித்தார்த் மேல்முறையீடு செய்தார்.

இதில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனை, இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. எனினும், தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராக சித்தார்த் ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இதேபோல் நடிகை பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி தன் மகளின் மரணம் தற்கொலை அல்ல என்றும் திட்டமிட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார் என குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

தள்ளுபடி

இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பிரதியுஷா கழுத்து நெரிக்கப்பட்டதற்கான அல்லது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. இது, விஷம் அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பாக அவரது தாய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம்.

அதே நேரத்தில், தற்கொலைக்குத் துாண்டிய குற்றச்சாட்டில் சித்தார்த் ரெட்டி குற்றவாளி என்பது உறுதி செய்யப் படுகிறது.

எனவே, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். ஜாமினில் உள்ள சித்தார்த் ரெட்டி, இன்னும் நான்கு வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சரணடைந்து சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நடிகை பிரதியுஷா உயிரிழந்து, 23 ஆண்டு களுக்குப்பின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

– டில்லி சிறப்பு நிருபர் -:

Source link