சென்னை – துாத்துக்குடி வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வேக்கு பரிந்துரை

சென்னை:சென்னையில் இருந்து, துாத்துக்குடி மற்றும் தஞ்சாவூரில் இருந்து, கர்நாடகா மாநிலம் மைசூருக்கு, வந்தே பாரத் ரயில்கள் இயக்க, ரயில்வே வாரியத்துக்கு, தெற்கு ரயில்வே பரிந்துரை செய்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – மைசூரு, கோவை; எழும்பூர் – திருநெல்வேலி, நாகர்கோவில் உட்பட எட்டு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அனைத்து ரயில்களிலும், பயணியர் கூட்டம் அதிகமாக உள்ளது. பயணியர் நெரிசல் அதிகம் உள்ள பல்வேறு வழித்தடங்களில், வந்தே பாரத் ரயில்களை படிப்படியாக இயக்க, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

நாட்டிலேயே பயணியர் பிரிவில் அதிக வருவாய் ஈட்டும் மண்டலமாக, தெற்கு ரயில்வே இருந்து வருகிறது. ஆண்டுதோறும் 9 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப, கூடுதல் ரயில்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறோம்.

எழும்பூர் – ராமேஸ்வரம் தடத்தில், வந்தே பாரத் ரயில் இயக்க, சில மாதங்களுக்கு முன், வாரியம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சென்னை – ராமேஸ்வரம் தடத்தில் புதிய வந்தே பாரத் ரயிலை, மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதனை நடத்த தயாராக வைத்துள்ளோம்.

இந்த ரயில் சேவை விரைவில் துவக்கப்பட உள்ளது. இதற்கான தேதியை, ரயில்வே வாரியம் விரைவில் அறிவிக்கும்.

இதேபோல், சென்னை – துாத்துக்குடி மற்றும் தஞ்சாவூர் – மைசூரு வழித்தடத்தில், வந்தே பாரத் ரயில்களை இயக்க, வாரியத்திடம் பரிந்துரை செய்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link