சென்னை: கன்னியாகுமரி, குன்றத்துார், திருச்செந்துார் நகராட்சிகளில், உலக வங்கி நிதியில், குடிநீர் திட்டங்களை செயல்படுத்தும் பணிகளை, தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவனமான, ‘டுபிசெல்’ துவக்கி உள்ளது.
தமிழகத்தில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த, அரசின் நிதி மட்டுமே போதுமானதாக இல்லை. இதனால், மத்திய அரசின் நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி போன்ற சர்வதேச அமைப்புகளிடம் இருந்தும் நிதி பெறுகிறது. இதன் அடிப்படையில், ‘டுபிசெல்’ மேற்பார்வையில், பி.டி.ஜி.எப்., என்ற திட்ட மேம்பாட்டு மானிய நிதி உருவாக்கப்பட்டு உள்ளது.
அதில் இருந்து, நகராட்சிகளில் குடிநீர் திட்டங்களை செயல்படுத்த நிதி வழங்கப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரி, குன்றத்துார், திருச்செந்துார் நகராட்சிகளில் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு, கலந்தாலோசனை நிறுவனம் தேர்வு செய்யப்பட உள்ளது.
