நீலோத்தி: "நீலோத்தி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் இதுதான்!" – பாடலாசிரியர் சாரதி |வரித்துணையே 2

‘நீலோத்தி’ பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம்.

Neelothi Lyricist Sarathy

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகளையும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர் இந்த “வரித்துணையே..!’.

Neelothi Song
Neelothi Song

அதில் இன்றைய பகுதிக்கு, ‘நீலோத்தி’ பாடல் குறித்த சுவாரஸ்ய கதைகளைப் பேசுவதற்கு பாடலாசிரியர் கவிஞர் சாரதியைச் சந்தித்தோம். பளிச்சிடும் சிரிப்போடு நம்மை வரவேற்று பேசத் தொடங்கியவர், “எனக்கு விகடன் மிகவும் நெருக்கமானது. நான் எழுத்துலகிற்கு வந்ததற்கு விகடனும் ஒரு காரணம். விகடனின் தடம் பத்திரிகை என் வாழ்க்கையில் அபரிமிதமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த தடம் பத்திரிகை பற்றி என்னுடைய ‘காசு கொடுக்கும் யானைகள்’ என்ற கவிதைத் தொகுப்பில் ஒரு கவிதையையும் எழுதியிருக்கிறேன்.” என்றவர் அந்தக் கவிதையையும் அடுத்த கணமே வாசிக்கத் தொடங்கினார்.

தூர்ந்து விடாத பசியோடு உன் தடத்தில் ஊர்ந்து கொண்டிருந்தவனை விட்டு பறந்து விட்டாய்

என கவிதையை வாசித்து முடித்து புன்னகைத்தவரிடம் ‘நீலோத்தி’ பாடல் குறித்து பேசத் தொடங்கினோம்.

நீலோத்தி
வரித்துணையே..! 2

அதே சிரித்த முகத்துடன் பேசத் தொடங்கியவர், “‘நீலோத்தி’ பாடலின் வாய்ப்பு எனக்கு ‘காற்றோடு பட்டம் போல’ பாடல் மூலமாகத்தான் கிடைத்தது. இந்தப் பாடல் இடம்பெறும் சூழலின் வலுவான கதையை எனக்கு இயக்குநர் விளக்கினார். இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு தோழனாக முழு ஸ்கிர்ப்டையும் படிக்கக் கொடுத்தார். நான் வெறும் சூழலை மட்டும் படித்துவிட்டு அதனை இயக்குநரிடமே கொடுத்துவிட்டேன். மற்றொரு பக்கம், இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் என்னை எழுதச் சொல்லி உற்சாகப்படுத்தினார். இந்தப் பாடலுக்குள் நான் சேர்க்க வேண்டிய கதை சார்ந்த விஷயங்கள் எனப் பலவற்றை இருந்தன.

Neelothi Song
Neelothi Song

இரண்டு மாற்று சமூகத்தை சேர்ந்த காதலர்கள், அப்துலின் பின்னணி, கலையரசியின் பின்னணி, தந்தையை இழந்த கலையரசியையும் அவளின் அக்காளையும் தொந்தரவு செய்யும் மாமா, அப்துலுக்காக பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கும் கலையரசி, இத்தனைக்கும் மத்தியில் அறத்தோடு செயல்படும் கதிரவன் என்கிற காவல் அதிகாரி, நம்பிக்கையளிக்கும் நீதியரசர் எனப் பல விஷயங்களையும் இந்தப் பாடலுக்குள் கொண்டு வர வேண்டிய கடமை எனக்கிருந்தது. இப்படியான அனைத்தையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நான் பல்லவியை மட்டும் காதலாக அமைத்திடலாம் என முடிவு செய்துவிட்டேன். இந்தப் பாடலில் அப்துலும், கலையரசியும் காதல் மூலம் சமத்துவப் பாதையை அடைகிறார்கள். சமத்துவம் என்றால் நீலம்!

இந்த வார்த்தையை அப்படியே மெட்டுக்குள் புகுத்திவிட முடியவில்லை. ஏனெனில், மெட்டு வேறொன்றாக இருந்தது. இப்படியான சமயத்தில் எனக்கு முத்தொள்ளாயிரம் பாடலொன்று நினைவிற்கு வந்தது. அதிலொரு பாடலில் நீலப் பூ, வீரனிடம் வந்து சேர்வதற்காக பூக்கிறது. அதுதான் அதனுடைய வேலை என சொல்லப்படுகிறது. சொல்லப்போனால், கலையரசியும் அப்படிதான் இருக்கிறாள். அதனால் ‘நீலம்’ என்கிற வார்த்தையை செல்லமாக பாடலுக்குள் கொண்டு வர முடிவு செய்துதான் ‘நீலோத்தி’ என்ற வார்த்தையை கொண்டு வந்தேன். இந்த வார்த்தையை வேறு யாரும் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதும் எனக்கு தெரியவில்லை. இந்த வார்த்தையை பயன்படுத்திவிடலாம் என இயக்குநரும் இசையமைப்பாளரும் நம்பிக்கை கொடுத்தார்கள். இந்தப் பாடலைப் பாடும்போதே பின்னணி பாடகி சின்மயி ‘இனி வரும் நாட்களில் பெண் குழந்தைகளுக்கு, ‘நீலோத்தி’ எனப் பெயர் வைக்கலாம்’ என்றார்.” என புன்முறுவல் தந்தார் சாரதி.

Neelothi Song
Neelothi Song

மேலும் பேசிய அவர், “படத்தில் கலையரசி மிகவும் பக்தி கொண்டவள். அவள் சாமியிடமும் ‘நீ எனக்கு நன்மைகள் செய்கிறாய். ஆனால், என்னுடைய சாமி அப்துல்தான்’ எனக் கூறும் வெளிப்பாடாகதான் ‘நேந்துகிட்டேன் சாமிகிட்ட, எஞ்சாமிய பார்த்துக்க’ என்கிற வரியை அமைத்தேன். அப்துலுக்கு எல்லோரையும் போல வாழ வேண்டும் என ஆசை இருக்கிறது. கலையரசியுடன் சந்தோஷமாக இருக்க வேண்டும் எனவும் அவனுக்குள் ஆசை இருக்கிறது. அவனை காப்பாற்ற யாரும் அங்கில்லை. அப்போதுதான் கதிரவன் அவனுடைய பக்கத்தையும் கேட்டறிகிறார்.

அதைதான் ‘நினைச்ச வாழ்க்கை வேணும்னு நெஞ்சம் கிடந்து ஏங்குதே. படைச்ச சாமி கேட்காததையும் படிச்ச சாமி கேட்டதே’ என்கிற வரிகளில் வெளிப்படுத்தியிருப்பேன். பாதி வரிகளை காதலாகவும், பாதி வரிகளை நம்பிக்கையூட்டும் வண்ணத்திலும் அமைத்திருந்தேன். கிட்டதட்ட, நானும் ஒரு அப்துல்தான். அப்துல் சிறையில் இருக்கிறார். நான் வெளியே இருக்கிறேன். ஆனால், நான் உள்ளம் என்னும் சிறையிலும், வறுமை என்னும் சிறையிலும் அடைபட்டுக் கிடக்கிறேன். நான் என் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என ஆசைக் கொண்டிருக்கிறேன். நாளை என்கிற நம்பிக்கையில்தான் நாம் அனைவரும் வாழ்க்கையை நடத்திச் செல்கிறோம்.

Lyricist Sarathy
Lyricist Sarathy

அப்படி எனக்காகவும், அனைவருக்காகவும் நான் எழுதிய வரிதான் ‘எல்லோரையும் போல, நல்லாருப்போம் நாளை’. இந்தப் பாடலை நான் எழுதி முடித்ததும் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி, ‘ஐயா நான் நினைத்தது கிடைத்துவிட்டது’ என திருப்தியுடன் சொன்னார். ‘காற்றோடு பட்டம் போல’ பாடலுக்கு தமிழ் திரையுலகின் அனைத்துப் பாடலாசிரியர்களும் என்னைத் தொடர்பு கொண்டு எந்த ஈகோவும் இல்லாமல் பாராட்டினார்கள். அதுபோல, இந்தப் பாடலுக்கு பலர் பாராட்டினார்கள், பாராட்டுகிறார்கள்…” என்றார் மனநிறைவுடன்.

Source link