நாமக்கல்: ''எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 25 நள்ளி ரவு முதல், தமிழகம் முழுதும் லாரிகள்

நாமக்கல்: ”எப்.சி., கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, வரும், 25 நள்ளி ரவு முதல், தமிழகம் முழுதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளன,” என, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின், தமிழக தலைவர் தன்ராஜ் கூறினார்.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின், தமிழக அவசர செயற்குழு கூட்டம், நேற்று நாமக்கல்லில் நடந்தது. சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்தார்.

நிருபர்களிடம் அவர் கூறியதாவது: லாரிக்கு தகுதிச்சான்று பெற, எந்த மாடலாக இருந்தாலும், 850 ரூபாய் மட்டுமே கட்டணம் இருந்தது. தற்போது, 10 – 13 ஆண்டிற்கு, 1,000 ரூபாய்; 13 – 15 ஆண்டிற்கு, 5,000 ரூபாய்; 15 – 20 ஆண்டிற்கு, 12,500 ரூபாய்; 20 ஆண்டிற்கு மேற்பட்ட லாரிகளுக்கு, 28,200 ரூபாயாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

இந்த கட்டணத்தை குறைக்கக் கோரி, போக்குவரத்துத் துறை அமைச்சர், உள்துறை அமைச்சர், உள்துறை செயலர், போக்குவரத்து ஆணையர் உள்ளிட்டவர்களை சந்தித்து மனு அளித்துள்ளோம்; 92 நாட்களாகியும் எந்த தீர்வும் எட்டவில்லை. அதனால், தமிழகம் முழுதும், ஒரு லட்சம் லாரிகள் தகுதிச்சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, வரும், 25 நள்ளிரவு முதல் லாரி ஸ்டிரைக் துவங்கும். வெளி மாநில லாரிகளும் தமிழகத்திற்குள் வராது. இங்கிருந்தும், வெளிமாநிலங்களுக்கு லாரிகள் செல்லாது. இவ்வாறு அவர் கூறினார்.

Source link