மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்த 25 பேரிடம் விசாரித்து ஓராண்டாகி விட்ட நிலையில், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், சில ஆண்டுகளுக்கு முன் சேவகர் உள்ளிட்ட பணிகளுக்கு பலர் நியமிக்கப்பட்டனர். இதில் ஒருவரின் கல்விச்சான்று குறித்து புகார் எழுந்தது. விசாரணையில் அவர் பத்தாம் வகுப்பு கல்விச்சான்றை போலியாக கொடுத்து பணியில் சேர்ந்தது தெரிந்தது.
அவரை போல, மேலும், 24 ஊழியர்கள் தங்கள் கல்விச்சான்றுகளை போலியாக கொடுத்து பணிபுரிவது உறுதியானது. இதுகுறித்து, ‘தினமலர்’ நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அதன் எதிரொலியாக அவர்களுக்கு விளக்கம் கேட்டு, அப்போதைய இணை கமிஷனர் செல்லத்துரை நோட்டீஸ் அனுப்பினார். மேலும், சம்பந்தப்பட்டோரிடம் விசாரணை நடத்தி, அறங்காவலர் குழுவிடம் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது.ஆனால் , இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புகாருக்குள்ளான ஊழியர்கள் சிலர், பணிஓய்வு பெற்று வருகின்றனர்.
இதனால் பணப்பலன் உள்ளிட்ட சலுகைகள் வழங்குவதில் நிர்வாக ரீதியாக சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறங்காவலர்கள் எந்த முடிவும் சொல்லாததாலும், புதியவர்களை நியமிக்க ஒப்புதல் வழங்காததாலும் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ள து.
ஹிந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறியதாவது: இதே பிரச்னை, திருத்தணியிலும் உள்ளது. அந்த ஊழியர்கள் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றுள்ளனர்.
தமிழகம் முழுதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், கடந்த 5 ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களின் கல்விச்சான்றுகள் குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும்.
சில கோவில்களில் ஹிந்து பெயரில் பிற மதத்தைச் சேர்ந்த சிலர் பணியாற்றுவதும் தெரிய வந்துள்ளது. அதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
