ராமநாதபுரம்: பாக்., பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருந்தவர்கள் மீதான வழக்கில் போலி ஆவணங்களை உருவாக்கியதற்காக இருவருக்கு இரண்டு ஆண்டுகள், ஒருவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியை சேர்ந்தவர் சித்தி சுலைஹா 52. இவரது அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40, மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் மலேசியாவில் அப்துல் ரஷீத் ஓட்டலில் 2015ல் வேலை செய்தனர்.
பின்னர் அப்துல் ரஷீத் உதவியுடன் இந்தியா வந்து என்மனங்கொண்டானில் உள்ள சித்தி சுலைஹா வீட்டில் தங்கினர். அப்போது தவறான தகவல்களை அளித்து முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா பெயரில் ஆதார் கார்டு பெற்றனர். அதன் பின் சித்தி சுலைஹா வீட்டின் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தனர்.
மோசடியாக பெற்ற ஆதார் கார்டை பயன்படுத்தி இரு ‘சிம்’ கார்டுகளை பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்பில் இருந்த முகமது மிப்லால் மவுலவியிடம் முகமது யாசீர் கொடுத்தார்.
அவர் ‘சிம்’ கார்டுகள் மூலம் 2021 டிச.,ல் இந்திய ராணுவ அமைப்பின் ஒரு அங்கமான ‘ஆர்மி பப்ளிக் ஸ்கூல்’ என்ற அமைப்பின் பெயரில் வாட்ஸ் ஆப் கணக்கை உருவாக்கினார். அந்த கணக்கு மூலம் பாதுகாப்புத்துறை அலுவலர்களின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பி மால்வேர் அட்டாக் செய்து ராணுவ ரகசியங்களை திருட முயற்சித்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கியூ பிரிவு போலீசார் 2021ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்தி சுலைஹா ஆகிய நால்வரையும் கைது செய்தனர். முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா திருச்சி இலங்கை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். அப்துல் ரஷீத், சித்தி சுலைஹா ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், முகம்மது யாசீர், பாரிகா ரிஸ்மியா ஆகியோர் போலி ஆவணங்கள் மூலம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு பெற்றது உறுதி செய்யப்பட்டதால் இரு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.5000 அபராதம் விதித்து மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் தீர்ப்பளித்தார்.
மேலும் அப்துல் ரஷீத்துக்கு போலி ஆவணங்கள் பெற உறுதுணையாக இருந்தது, மலேசிய குடியுரிமை பெற்று இந்தியாவிற்கு முறைகேடாக வந்து சென்றது உள்ளிட்டவற்றிற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்தார்.
சித்தி சுலைஹா மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் கார்த்திகேயன் ஆஜரானார்.
