சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் அண்ணா நினைவுநாள் மடல்.
தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நம் மக்களுக்கான அரசியல் இயக்கத்தை 1949-ம் ஆண்டு தொடங்கி, 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகத்தை அரியணை ஏற்றியவர்.
அண்ணாவின் சிறப்புமிக்க ஆட்சி இரண்டாண்டுகள் கூட முழுமையாக நீடிக்கவில்லை. கொடிய புற்றுநோய் காரணமாக இயற்கை நம் அண்ணனைப் பறித்துக்கொண்டது. பேரறிஞர் அண்ணாவுக்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, எதுவும் ஆகாது.. அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் அண்ணாவின் கொள்கைத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர்.
பேரறிஞர் அண்ணாவிடம் இதயத்தை இரவலாகப் பெற்று, 50 ஆண்டுகாலம் இயக்கத்தைத் திறம்பட நடத்தி, இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் தலைவராகத் திகழ்ந்த கலைஞர், 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் நாள் நம்மைவிட்டுப் பிரிந்தபோது, அவர் விரும்பியபடியே வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுக்குப் பக்கத்திலேயே நிரந்தர ஓய்வெடுக்கத் தொடங்கினார். கழகத்தைத் தலைமையேற்று நடத்திய அந்த இருபெரும் தலைவர்களையும், ஐம்பெரும் முழக்கங்களையும் நெஞ்சில் ஏந்தி திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை உங்களில் ஒருவனான நான், உங்களின் பேராதரவுடன் வழிநடத்தி வருகிறேன்.
கழகத்தை 6-வது முறையாக அரியணை ஏற்றியதில் உடன்பிறப்புகளான உங்களின் அயராத உழைப்புக்கு முதன்மையான பங்கு உண்டு. உங்களை வழிநடத்தும் பொறுப்பைச் சுமந்திருக்கும் நான் ஒவ்வொரு நாளும் ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறேன். பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் இருட்டிலிருந்து தமிழ்நாடு மீட்கப்பட்டு விடியல் வெளிச்சத்தைக் காண்கிறது. மத்திய பாஜக அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது. இந்தியாவுக்கே முன்னோடியான சமூகநலத் திட்டங்களை வழங்கி, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் வளர்ச்சியிலும் திராவிட மாடல் அரசு பெரும் பங்காற்றி வருகிறது.
பேரறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தமிழ்நாட்டில் அரியணையில் ஏற்றியது என்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம். 1967-ல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.
இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அதிமுக.
வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பாஜகவின் நோக்கமாக உள்ளது. அதற்கு மவுன சாட்சியாக அமைதி காக்கிறது அதிமுக. மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மத்திய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அதிமுக.
மக்களிடம் செல் என்று பேரறிஞர் அண்ணா சொன்னது போல, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் இல்லாத கொரோனா காலத்திலும் மக்களிடம் சென்றது, ஆட்சியில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தும் இந்த ஐந்தாண்டுகளிலும் மக்களுடனேயே பயணிக்கிறது. மக்களுக்காகவே செயல்படுகிற மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்தை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற வைத்து, திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைத்திட வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாட்டு மக்களின் மனதில் பதிந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பாஜகவும் அதனுடன் இணைந்துள்ள அதிமுகவும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் உங்களில் ஒருவனான நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.
என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம். அண்ணா வழியில் அயராது உழைப்போம். மக்களிடம் செல்வோம். அவர்களின் ஆதரவுடன் சட்டமன்றத் தேர்தலில் உறுதியாக வெல்வோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
