புதுடில்லி: இந்தியா வந்துள்ள செர்பியா அதிபர் மற்றும் எஸ்தோனியா அதிபர் டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினர்.
டில்லியின் பாரத மண்டபத்தில் ஏஐ உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பிரான்ஸ் அதிபர், பிரேசில் அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் டில்லி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை செர்பியா அதிபர் அலெக்சாண்டர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக பிரதமர் மோடிவெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏஐ உச்சி மாநாட்டுக்கு இடையே செர்பியா அதிபர் அலெக்சாண்டரை சந்தித்தேன். பாதுகாப்பு, உற்பத்தி, உரம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தோம். பல ஆண்டுகளாக இந்தியாவும், செர்பியாவும் இணைந்து பணியாற்றி வருகின்றன. வரும் காலங்களில் இரு நாட்டு உறவும் இன்னும் உச்சம் பெறும் எனக்கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து எஸ்தோனியா நாட்டு அதிபர் அலர் காரிஸ், டில்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
