மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்த நாளில், 75 பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அங்கீகாரம் வழங்கும் கோப்புகள் கையெழுத்தானது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., – சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இந்த அரசில், துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித் பவார், கடந்த மாதம் 28ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவர், மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் விபத்தில் மரணமடைந்த நாளில், அவரது துறையில் உள்ள பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் வழங்குவது தொடர்பான 75 கோப்புகள் கையெழுத்தாகி உள்ளன.
மாநிலத்தின் மிகப் பெரிய தலைவர் விபத்தில் பலியாகி பரபரப்பு நிலவிய நேரத்தில், ஒரே நாளில், 75 கோப்புகளில் கையெழுத்திடுவது எப்படி சாத்தியம் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
‘ஒரே நாளில் ஏராளமான கோப்புகள் கையெழுத்தாகியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களில ஆய்வு செய்து, உரிய நடைமுறையை பின்பற்றி அனுமதி வழங்கப்பட்டதா’ என, எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதற்கிடையே, கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் பெற்ற சிறுபான்மையினர் நலத்துறை துணை செயலர் மிலிந்த் ஷெனாயை மாநில அரசு பணியிடமாற்றம் செய்து காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது.
இது தொடர்பாக விசாரணை நடத்த அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுநேத்ரா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் மாநில அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
