மும்பை: அமெரிக்க விரைவு சரக்கு போக்குவரத்து நிறுவனமான ‘பெட்எக்ஸ்’, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி சரக்கு மையம் அமைக்க, 2,500 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் அறிக்கை:
அதானி விமான நிலைய ஹோல்டிங்ஸ் லிமிடெட் உடன் இணைந்து, நவி மும்பையில் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டில், 3 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட முழு தானியங்கி சரக்கு மையத்தை அமைக்க உள்ளோம்.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா, மஹாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த மையம், மேற்கு இந்தியாவின் சர்வதேச வர்த்தக திறனை மேம்படுத்தும்.
இது கட்டி முடிக்கப்பட்ட பின், சரக்கு போக்குவரத்து, கிடங்கு மற்றும் தொடர்புடைய சேவைகளில் 6,000க்கும் மேற்பட்ட நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
இது, ஜவஹர்லால் நேரு துறைமுகம், பல்வேறு வர்த்தக வழித்தடங்கள், போக்குவரத்து நெட்வொர்க்குகளுக்கு அருகில் இருப்பதால், எலக்ட்ரானிக்ஸ், பொறியியல் பொருட்கள், மருந்துகள், அழிந்து போகக்கூடிய பொருட்கள் போன்ற துறைகளுக்கு விரைவான மற்றும் நம்பகமான சேவை அளிக்கும்.
இவ்வாறு அறிக்கை தெரிவிக்கிறது.
