2 ஆண்டாக டில்லி மகளிர் கமிஷன் ஏன் செயல்படவில்லை: ஐகோர்ட்

– டில்லி சிறப்பு நிருபர் -: ‘டில்லி மகளிர் கமிஷன் இரு ஆண்டுகளாக ஏன் செயல்படாமல் உள்ளது?’ என, டில்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது

டில்லி உயர் நீதிமன்றத்தில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த லோக்சபா எம்.பி., சுதாகர் சிங் தாக்கல் செய்த பொதுநல மனு:

கடந்த 2024-க்கு பின், டில்லி மகளிர் கமிஷன் செயல்படாமல் உள்ளது. கமிஷனுக்கான தலைவர், நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. டில்லி மகளிர் கமிஷன் இரு ஆண்டுகளாக செயல்படாமல் இருப்பதால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் டில்லி உயர் நீதிமன்றம் தலையிட்டு, தலைவர், நிர்வாகிகளை நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோர் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:

டில்லி மகளிர் கமிஷன் இரு ஆண்டுகளாக ஏன் செயல்படாமல் இருக்கிறது? அங்கு காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், கமிஷன் மூடப்படாமல் இருப்பதை உறுதி செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, இரு வாரங்களுக்குள் டில்லி அரசு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்ட அமர்வு, வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது.

Source link