புதுடில்லி: கர்நாடகாவில், மக்கள் பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலங்களை, கட்சி அலுவலகம் கட்டுவதற்காக அம்மாநில காங்., அரசு வழங்கி உள்ளதாக எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும், 50 கோடி ரூபாய் மதிப்புள்ள 24 நிலங்களை, வெறும் 2 கோடி ரூபாய்க்கு காங்கிரஸ் கட்சியின் அறக்கட்டளைக்கு, மாநில அரசு விற்பனை செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள பெலகாவியில், 1924ல், மஹாத்மா காந்தி தலைமையில் காங்., மாநாடு நடந்தது. இதன் நுாற்றாண்டை குறிக்கும் வகையில், மாநிலம் முழுதும், 100 காங்., அலுவலகங்களை கட்ட ஆளும் காங்., அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான இடங்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவில் மக்கள் பயன் பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட , 24 அரசு நிலங்களை, கட்சி அலுவலகம் கட்டுவதற்காக, ஆளும் காங்., அரசு வழங்கி உள்ளதாக எதிர்க்கட்சியான பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது.
இது குறித்து, டில்லியில் உள்ள பா.ஜ., தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கர்நாடகா முழுதும், 100 கட்சி அலுவலகங்களை கட்டுவதற்காக, ஆளும் காங்., அரசு, 24 அரசு நிலங்களை காங்கிரஸ் பவன் அறக்கட்டளைக்கு விற்பனை செய்துள்ளது. மக்களின் பொது பயன்பாட்டு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இந்த அரசு நிலங்கள், சோனியா குடும்பத்தை திருப்திப்படுத்துவதற்காக வழங்கப்பட்டுள்ளன.
இந்த 24 நிலங்களின் மதிப்பு, 50 கோடி ரூபாய். ஆனால், வெறும் 2 கோடி ரூபாய்க்கு இந்த நிலங்களை காங்., அறக்கட்டளை பெற்றுள்ளது. இதன் மூலம் , 48 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
முதல்வர் சித்தராமையா – துணை முதல்வர் சிவகுமார் இடையே முதல்வர் நாற்காலிக்காக போட்டி நடக்கிறது. இதில், சோனியா குடும்பத்தின் ஆதரவை பெற மக்கள் சொத்துக்களை இருவரும் வாரி வழங்குகின்றனர். ஊழலுக்கு மறு பெயர் என்றால், அது காங்கிரசாக தான் இருக்கும்.
தன் நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதில் மட்டுமே முதல்வர் சித்தராமையா குறியாக இருக்கிறார். மக்களின் நலனில் அவருக்கு துளி கூட அக்கறை இல்லை. காங்கிரசில் நடக்கும் அதிகாரப் போட்டியால் கர்நாடக மக்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? வெறும் 2 கோடி ரூபாய்க்கு, 24 அரசு நிலங்களை காங்கிரசுக்கு வழங்க முதல்வர் சித்தராமையாவுக்கு யார் உரிமம் கொடுத்தது? இவ்வாறு அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டுக்கு காங்., தரப்பிலிருந்தோ அல்லது கர்நாடக அரசிடமிருந்தோ எந்த பதிலும் வரவில்லை.
