நாளை வேலை நிறுத்தம் செய்தால் பதிவுத்துறை தலைவர் எச்சரிக்கை

சென்னை: ‘பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பதிவுத்துறை பணியாளர்கள், நாளை அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ள நிலையில், போராட்டத்தில் பங்கேற்போர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர், அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழ்நாடு பதிவுத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், நாளை ‘ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு’ போராட்டம் நடத்தப்பட உள்ளது. இது, வேலை நிறுத்தப் போராட்டமாக கருதப்படும். அரசு அலுவலக செயல்பாடுகளை, முடக்கும் வகையில், போராட்டத்தில் ஈடுபடுவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை மீறும் செயலாகும்.

பதிவுக்கு வரும் பொது மக்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், அரசு வருவாயை முடக்கும் வகையிலும், இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடுவது, சற்றும் ஏற்புடையதல்ல. எனவே, நாளை உரிய சான்றுகளுடன் கேட்கப்படும் மருத்துவ காரணங்களுக்கான விடுமுறை தவிர்த்து, வேறு எந்த ஒரு விடுமுறையையும் அனுமதிக்கக் கூடாது.

நாளைய தினம், பணியாளர்களின் வருகை குறித்த விபரங்களை, காலை 10:10 மணிக்குள் வழங்க வேண்டும். உள்நோக்கத்துடன் விடுமுறை எடுக்கும் நபர்கள் மீது, 17 ‘பி’ விதியின் கீழ், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தப் போராட்டத்தை துாண்டுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

***

Source link