சென்னை: ‘அவதுாறாக பேசும் அளவிற்கு ஆணவம் தலைக்கேறிய தி.மு.க.,வினர், எந்த ஜென்மத்திலும் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது. அக்கட்சி எம்.பி., தயாநிதி, தன் பிளவுவாத பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்’ என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
கரூரில் நடந்த தி.மு.க., கூட்டத்தில் பேசிய தயாநிதி, ‘கோவை மக்கள் தங்கள் ஊரைத் தவிர, மற்ற எல்லா ஊர்களையும் கெடுப்பர்’ என, கொங்கு மக்களின் மீது தனக்குள்ள மொத்த வன்மத்தையும் கொட்டியுள்ளார்.
காலங்காலமாக தி.மு.க.,வால் முழுதுமாக கைப்பற்ற முடியாத சிம்ம சொப்பனமாக திகழும் கோவை மாவட்டத்தின் மீது, உடன்பிறப்புகளுக்கு அளவு கடந்த ஆத்திரம் இருப்பது இயல்பானது தானே?
தவறான திட்ட அறிக்கை வாயிலாக, கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை தி.மு.க., அரசு முடக்கி வைத்ததற்கான காரணம் இப்போது தெரிகிறதா?
தென் மாநிலங்களின், ‘மான்செஸ்டர்’ என்றழைக்கப்படும் கோவையை, ‘ஊரை கெடுப்பவர்களின் ஊர்’ என்று பொது வெளியில் அவதுாறாக பேசுமளவிற்கு ஆணவம் தலைக்கேறிய தி.மு.க.,வினர், இனி எந்த ஜென்மத்திற்கும் கோவை மண்ணில் கால் பதிக்க முடியாது.
தயாநிதி தன் பிளவுவாத பேச்சிற்கு உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
