சென்னை: சென்னையில் நேற்று, கோயம்பேடு நுாறடி சாலையில், 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தக் கோரி, நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் , மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 650 பேரை கைது செய்து, ராஜரத்தினம் விளையாட்டு திடலில் தங்க வைத்தனர். பின், இரவு 7:00 மணிக்கு, 18 மாநகர பஸ்களில் ஏற்றி கிண்டி, மதுரவாயல், கோயம்பேடு, கிளாம்பாக்கம் என, அதிகாலை 2:00 மணி வரை சுற்றியுள்ளனர்.
அனைவரையும் கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அழைத்து வந்த பஸ்களில் இருந்து, மாற்றுத்திறனாளிகள் இறங்க மறுத்ததால், அவர்களை அங்கேயே போலீசார் விட்டுச் சென்றனர். அந்த பஸ்களில் இரவை கழித்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலையில், கோயம்பேடு பஸ் நிலையத்தில், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் பகுதிகள், வடபழனி சாலை என, நான்கு இடங்களில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தி, சாலையோரம் அமர செய்தனர். பின், மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளை, திருமங்கலத்தில் உள்ள மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு நடத்தினார். இதனால், கோயம்பேடு, அரும்பாக்கம், வடபழனி என, 100 அடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க தலைவர் வில்சன் கூறியதாவது:
உதவித்தொகையை, 2,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்த போராடி வருகிறோம். அமைச்சர் கீதா ஜீவன் அழைத்து பேசினார். ‘வரும் மே முதல் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்’ என, உறுதியளித்தார். இதை உறுதி செய்யும் வகையில், சட்டசபையில் முதல்வர் அறிவிக்க வேண்டும் அல்லது அரசு அறிவிப்பாக வெளியிட வேண்டும் என, அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்து, நேற்று அதிகாலை 2:00 மணி வரை அலைக்கழித்தனர். இரவு முதல் இதுவரை உணவு, தண்ணீர் என, எதுவும் அளிக்கவில்லை. அடாவடியாக கைது செய்ததில், எங்கள் பொதுச்செயலர் ஜான்சி ராணி காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
‘என் அப்பா தான், ஊனமுற்றோர் என்பதை மாற்றுத்திறனாளிகள் என, மாற்றினார். ‘அவர் உங்கள் மீது கொண்ட அன்பால் தான் மாற்றுத்திறனாளிகள் துறையை தன் வசம் வைத்திருந்தார். அவரை பின்பற்றி, நானும் மாற்றுத்திறனாளிகள் துறையை வைத்துள்ளேன்’ என்கிறார் முதல்வர் ஸ்டாலின். முதல்வரிடம் துறை உள்ளது நல்ல விஷயம். ஆனால், வெறும் பெயர் மாற்றம் மட்டும் சோறு போடாது. இவ்வாறு அவர் கூறினார்.
மின்வாரிய ஊழியர்கள்
தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் அனைவருக் கும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அதன்படி, 2023 டிச., முதல் புதிய ஊதியம் வழங்கப்பட வேண்டும். இதை நிர்ணயம் செய்ய, 18 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஊதிய உயர்வை விரைவாக வழங்க வலியுறுத்தி, சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பின் சி.ஐ.டி.யூ., சங்க பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதனால், பணியாளர்கள் கூடுவதை தவிர்க்க, அலுவலகத்தின் மூன்று வாயில்கள் பூட்டப்பட்டன. ஒரு வழியாக மட்டுமே உள்ளே, வெளியே செல்பவர்கள் யார் என பார்த்து போலீசார் அனுமதித்தனர். இதன்பின், மின்வாரிய ஊழியர்கள் கூவம் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.
விரிவுரையாளர்கள்
தமிழ்நாடு அரசு கல்லுாரிகள், கவுரவ விரிவுரையாளர்கள், கூட்டமைப்பின் சார்பில், யு.ஜி.சி., உத்தரவின்படி, மாத சம்பளமாக, 57,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட, ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளாக, நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட கவுரவ விரிவுரையாளர்களை போலீசார் கைது செய்தனர்.
கறிக்கோழி விவசாயிகள்
கறிக்கோழி பண்னை விவசாயிகள் சார்பில், கறிக்கோழி பண்னைகளுக்கு, இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று காலை, சென்னை எழும்பூர், எல்.ஜி. ரவுண்டானாவிலிருந்து, தலைமை செயலகம் நோக்கி, 500க்கும் அதிகமானோர், பேரணியாக செல்ல முயன்றனர். போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து, அவர்களை தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
மக்கள் நல பணியாளர்
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உட்பட, நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கத்தினர், சென்னையில் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டையில் உள்ள, பனகல் மாளிகை அருகே நடந்த, காத்திருப்பு போராட்டத்திற்கு, தமிழகம் முழுதும் இருந்து வந்திருந்த, 700க்கும் அதிகமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊராட்சி செயலர்கள்
தமிழக அரசின், புதிய ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், கடந்த 4ம் தேதி முதல், சென்னையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று, சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள, பனகல் மாளிகை அருகே நடந்த, காத்திருப்பு போராட்டத்தில் 2,000க்கும் அதிகமானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள்
ஊரக வளர்ச்சி துறையில், தற்காலிக பணியில் உள்ள பணியாளர்கள், தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நேற்று மூன்றாம் நாளாக, சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
கிராம உதவியாளர்கள்
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், கடந்த 5ம் தேதி முதல், தமிழகம் முழுதும் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது. நேற்று, சென்னை எழிலகம் வளாகத்தில், 300க்கும் மேற்பட்ட கிராம உதவியாளர்கள், தங்கள் குடும்பத்தினருடன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுதும், அரசு திட்டங்களை கிராம மக்களிடம் கொண்டு செல்வது, பிறப்பு — இறப்பு குறித்து, அரசுக்கு தகவல் தெரிவிப்பது உட்பட, பல்வேறு பணிகளை கிராம உதவியாளர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், இப்பணிகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
டாஸ்மாக் ஊழியர்கள்
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக்கடைகளில் பணிபுரியும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழுவினர், எழும்பூரில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றும், போராட்டம் நடந்தது.
இதற்கிடையே, டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைக்கு தீர்வு காண, குழு அமைக்கப்பட உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்கள்
பதவி உயர்வை தாமதப்படுத்தி வருவதை கண்டித்து, சுகாதார ஆய்வாளர்கள், பொது சுகாதாரத்துறை இயக்குநரகத்தில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தை, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பொறியாளர்கள் கூட்டமைப்பு
ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பினர், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் சித்ரா திரையரங்கம் முதல் எல்.ஜி. ரவுண்டான வரை பேரணியாக வந்த பொறியாளர்கள், பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போராட்டம் ‘வாபஸ்’
‘டெட்’ தேர்வு மதிப்பெண் குறைப்பு உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகள் படிப்படையாக நிறைவேற்றப்படும் என, அமைச்சர் கீதா ஜீவன் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் போராட்டம், தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
போலீசார் அடக்குமுறை
போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது போலீசார் நடத்திய தாக்குதலில், தி.மு.க., கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்.கம்யூ., கட்சியின் முன்னாள் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணனின் மனைவி ஜான்சிராணி உட்பட, பலர் காயமடைந்துள்ளனர். போராடும் மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிப்பதும், உணவு உட்பட அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல் சித்ரவதை செய்வதும் கண்டனத்திற்குரியது.
– தினகரன் அ.ம.மு.க., பொதுச்செயலர்
பாசிச அரசு
மாற்றுத்திறனாளிகளை நள்ளிரவில் கைது செய்து, சென்னை முழுக்க அலைக்கழித்துள்ளதை கண்டிக்கிறேன். கோரிக்கை குரல்களை ஒடுக்க நினைப்பதுதான், தி.மு.க.-,வின் பாசிச மனநிலைக்கு உதாரணம். தி.மு.க., கூட்டணி கட்சித் தலைவரின் மனைவி மீதே காவல் துறை தாக்குதல் நடத்தும் நிலையில்தான், ஸ்டாலின் அரசு உள்ளது.
– பழனிசாமி அ.தி.மு.க., பொதுச்செயலர்
