பொதுவாக கோர்ட் விவகாரங்களை செய்தியாளர்கள் ரிப்போர்ட் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்பொது நீதிமன்ற விசாரணைகளை யார் வேண்டுமானாலும் போனிலோ அல்லது கம்யூட்டரிலோ நேரடியாக பார்த்துக்கொள்ளும் வசதி வந்துவிட்டது. கோவிட்டிற்கு பிறகு நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதனால் நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை துல்லியமாக கேட்க முடியும். ஆனால் கோவிட்டுக்கு முன் இந்த வசதி கிடையாது.
விசாரணையின் போது நீதிபதி என்ன சொன்னார் என்பதை சரியாக குறித்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் நீதிபதிகள் பேசுவது சரியாக கேட்காது. பாதி கேட்டதை வைத்து ரிப்போர்ட் செய்தால் ரிப்போர்ட்டர் மற்றும் மீடியா நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு (contempt) வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.
நீதிபதிகளின் இருக்கைகளுக்கு எதிரே மைக் உண்டு. இருப்பினும் பாதி நேரம் இந்த மைக்கை நீதிபதிகள் ஆப் செய்துவிடுவார்கள். இதனால் அவர்கள் என்ன கருத்து சொல்கின்றனர் என்பது தெளிவாக கேட்காது.
இதனால் நீதிபதி சொன்னதும், நாம் நோட் புக்கில் குறித்துக் கொண்டதும் சரிதானா என சக நிருபர்களிடம் செக் செய்து கொள்வது வழக்கம். இப்படி இருந்தும் நான் பணியாற்றிய என்.டி.டி.வி., மீது அவமதிப்பு வழக்கு (contempt case) ஒன்றை உச்சநீதிமன்றம் பதிவு செய்யும்படி உத்தரவிட்ட சம்பவம் ஒன்று உண்டு. இது நடந்தது செப்டம்பர் 2004ம் ஆண்டு.
திங்கட்கிழமை விடுமுறை
எங்கள் டிவியில் வாரத்திற்கு பணியாற்றும் ரிப்போர்ட்டர்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை. இது எல்லோருக்கும் ஒரே நாளில் இருக்காது. ஒருவருக்கு திங்கள், செவ்வாய் விடுமுறை என்றால் மற்றவருக்கு புதன், வியாழன் என இருக்கும். இதனால் செய்தி சேகரிப்பது தடைபடாது. எனக்கு வழக்கமாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள். காரணம் உச்ச நீதிமன்றம் இந்த நாட்களில் விடுமுறையாக இருப்பதால்.
ஒரு நாள் என்னுடைய மேனேஜிங் எடிட்டர் சோனியா சிங் என்னை அழைத்தார். அவர்தான் எனக்கு பாஸ். ஏதாவது பிரச்னையா? எதற்கு இந்த திடீர் அழைப்பு என யோசித்தபடி அவர் அறைக்கு சென்றேன். “வைத்யா…உனக்கு சனி, ஞாயிறுதானே ஆப் (off)” என கேட்டார். ஆமாம் என தலையாட்டினேன். ”அடுத்த வாரத்திலிருந்து உனக்கு ஞாயிறு, திங்கள் off,” என்றார்.”திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் வேலை செய்யுமே… அன்று நான் விடுமுறை எடுத்துக்கொண்டால் யார் செய்தி சேகரிப்பார்கள்… எனக்கு சனி, ஞாயிறு off தினங்களாக இருக்கட்டுமே,” என கேட்டேன்.
“நோ…நோ… ஒவ்வொரு வாரமும் உனக்கு சனி, ஞாயிறு off கொடுக்க முடியாது… மற்ற ரிப்போர்ட்டர்களுக்கும் off கொடுக்க வேண்டியிருக்கும். அடுத்த வாரம் முதல் ஞாயிறு, திங்கள் உன் off தினங்கள்… திங்கட்கிழமையன்று வேறு யாராவது உச்ச நீதிமன்றத்திற்கு ரிப்போர்ட் செய்ய போவார்கள்,” என்று கறாராக சொல்லிவிட்டார். அவர் சொன்னதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது.
அதிர்ச்சி
அடுத்த வாரம் எனக்கு ஞாயிறு, திங்கள் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமை அனைவரும் வீட்டில் இருந்ததால் ஜாலியாக இருந்தது. மறுநாள் திங்கட்கிழமை, என்னைத் தவிர மற்றவர்கள் வேலைக்கு சென்றுவிட்டனர். நான் தனியாக வீட்டில் இருந்தேன். உச்ச நீதிமன்றத்தில் என்ன நடக்கிறது என்பது இப்போது எக்ஸ் தளம் மற்றும் சோஷியல் மீடியாக்களில் உடனடியாக வெளியாகி விடுகிறது. ஆனால் அப்போது நிலைமை வேறு. வாட்ஸ் அப்பும் அதிகம் பிரபலம் ஆகாத நேரம்.
மதியம் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். திடீரென அலுவலகத்திலிருந்து போன். ‘நீதிபதி சந்தோஷ் ஹெக்டே போன் நம்பர் அவசரமாக வேண்டும்’ என்றனர். ‘எதற்கு நீதிபதியின் போன் நம்பர் தேவைப்படுகிறது’ என கேட்டதற்கு, ‘உனக்கு தெரியாதா, நம் டிவி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போட்டுள்ளது உச்ச நீதிமன்றம்’ என்றார், பேசிய நண்பர்.
இதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி. இதுவரை எந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருந்தோமே… இப்போது அதற்கு உலை வைத்துவிட்டார்களே…! “அவமதிப்பு வழக்கு போடுகிற மாதிரி எந்த ஒரு வழக்கையும் நான் ரிப்போர்ட் செய்யவில்லையே…,” என போன் செய்தவரைக் கேட்டேன்.
“இதற்கும் உன் ரிப்போர்ட்டிங்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என சொல்லி என்ன நடந்தது என்பதை விளக்கினார் அந்த சப்-எடிட்டர்.
நடந்தது என்ன?
திங்கட்கிழமை எனக்கு விடுமுறை அளித்துவிட்டதால் அன்று யாரும் கோர்ட் செல்லவில்லை. பிடிஐ செய்தி நிறுவனம் மற்றும் தெரிந்த அட்வகேட்கள் மூலமாக முதல் திங்கட்கிழமையன்று செய்தி பெற்று சமாளித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் பல கோர்ட்கள் உள்ளன. தலைமை நீதிபதி முதல் கோர்ட்டில் அமர்வார். இவருக்கு அடுத்து சீனியாட்டியில் உள்ள நீதிபதி 2ம் எண் கோர்ட்டில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்.
ஒவ்வொரு கோர்ட்டிலும் குறைந்த பட்சம் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும். இன்றைய நிலவரப்படி உச்ச நீதிமன்றத்தில் 17 கோர்ட்கள் இயங்குகின்றன. அன்றைய தினம் இரண்டாம் நம்பர் கோர்ட்டில் நடந்த சம்பவம்தான் எங்கள் டிவி மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய காரணம். தலைமை நீதிபதிக்கு அடுத்தபடியாக சீனியாரிட்டியில் இருந்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே இரண்டாம் எண் கோர்ட்டில் இன்னொரு நீதிபதியுடன் அமர்ந்து வழக்குகளை விசாரித்துக்கொண்டிருந்தார்.
நம் தேசிய கொடி தொடர்பான ஒரு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது.பொது நிகழ்ச்சிகளில், குறிப்பாக புட்பால் மற்றும் கிரிக்கெட் மேட்ச்களில் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தலாமா என்பது குறித்தும் விவாதம் நடந்தது. அப்போது நீதிபதி சந்தோஷ் ஹெக்டே ஏதோ சொல்லியிருக்கிறார்.
உமா பாரதியின் தேசிய கொடி யாத்திரை
அந்த சமயத்தில் பாஜ தலைவரான உமா பாரதி, ‘திரங்கா யாத்ரா’ அதாவது தேசிய கொடி யாத்திரையை மேற்கொண்டிருந்தார். 1994ல் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ல் கர்நாடகாவின் ஹூப்ளியில் உள்ள ஈத்கா மைதானத்தில் தேசிய கொடி ஏற்ற முயற்சி செய்தார். இந்த மைதானத்தில் எதுவும் செய்யக் கூடாது, மதக் கலவரம் வரும் என அங்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என தடை போட்டிருந்தது அப்போதைய காங்கிரஸ் அரசு. இதை உமா பாரதி மீற முயன்றதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2004ல் இந்த வழக்கிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதைக் கொண்டாட ஹுப்ளியிலிருந்து இந்த தேசிய கொடி யாத்திரையைத் தொடங்கினார் அவர்.
இந்த யாத்திரை குறித்து நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கருத்து தெரிவித்தார் என எங்கள் டிவியில் செய்தி வந்துவிட்டது.
இந்த செய்தியை யார் எங்கள் நியூஸ் டெஸ்க்கில் சொன்னார்கள் என தெரியவில்லை. உமா பாரதியின் ‘திரங்கா யாத்ரா’விற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் என செய்தி Flash ஆகிவிட்டது.
ஆங்கில செய்தி சேனலை மக்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, அதிகாரத்தில் இருப்பவர்கள், நீதிபதிகள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மேலே சொன்ன Flash நியூஸை நீதிபதி சந்தோஷ் ஹெக்டே பார்த்துவிட்டார் போலிருக்கிறது. உடனே தன் செயலரை அழைத்து என்.டி.டி.வி.,க்கு எதிராக அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய சொல்லிவிட்டார்.
மன்னிப்பு
உடனே எங்கள் அலுவலகத்திற்கு உச்ச நீதிமன்ற அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அவதூறு வழக்கு செய்தியை சொன்னதோடு, நோட்டீஸ் அனுப்ப விலாசமும் கேட்டார்களாம். இதனால்தான் எனக்கு போன் செய்து நீதிபதியின் போன் நம்பரைக் கேட்டுள்ளனர். அவருடைய வீட்டு போன் நம்பரைத் தேடி கண்டுபிடித்து அலுவலகத்திற்கு சொன்னேன். அன்றைய தினம் செய்தி ஆசிரியாக இருந்தவர் அனிந்தோ சக்ரவர்த்தி. நல்ல பத்திரிகையாளர். அவரும் எனக்கு போன் செய்து விஷயத்தைச் சொன்னார்.
பிறகு அவர் நீதிபதியிடம் பேசி மன்னிப்பு கேட்டுள்ளார். அத்தோடு டிவியிலும் அது தவறான செய்தி என மன்னிப்பு கேட்டு செய்தி போடப்பட்டது. பிரைம் டைம் செய்தி நேரத்திலிருந்து இரவு முழுக்க இந்த மன்னிப்பு டிவியில் காட்டப்பட்டது. மறுநாள் இந்த வழக்கு கோர்ட் 2ம் எண்ணில் விசாரணைக்கு வந்தது. காலை 10 மணிக்கே இந்த கோர்ட்டிற்குள் சென்று நின்று கொண்டேன். பல வக்கீல்களுக்கும் இந்த வழக்கு குறித்து தெரிந்திருந்ததால் கோர்ட்டிற்குள் கூட்டம் அதிகமாக இருந்தது.
10.30 மணிக்கு நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவும் மற்றொரு நீதிபதியும் வந்து அவர்கள் இருக்கைகளில் அமர்ந்தனர். ‘என்னாகுமோ’ என மனம் திக் திக் என அடித்துக் கொண்டது. நீதிபதி ஹெக்டே என்னைப் பார்த்தார். பிறகு ஆர்டரை படிக்க ஆரம்பித்தார். “என்.டி.டி.வி., அந்த தவறான செய்திக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இப்போதைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தேவையில்லை,” என்று கூறி விட்டார்.
அப்பாடா… ஒரு வழியாக அவதூறு வழக்கு முடிந்தது.
மீண்டும் ஞாயிறு
இது நடந்த அன்று மாலை மீண்டும் சோனியா சிங்கிடமிருந்து அழைப்பு. அந்த தவறான செய்தியை நான் ரிப்போர்ட் செய்யவில்லை என்பதால் என்னிடம் எதுவும் சோனியாவால் கேட்க முடியாது. என்னதான் சொல்கிறார் என பார்ப்போம் என அவர் அறைக்குள் சென்றேன்.
“வைத்யா….இந்த வாரத்திலிருந்து உனக்கு சனி, ஞாயிறு ஆப் (off) “ என சொன்னார். ஓகே மேடம் என பதில் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். உச்ச நீதிமன்ற ரிப்போர்ட்டிங் என்பது, அரசியல்வாதிகளிடமிருந்து செய்தி சேகரிப்பது போல இல்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவான பிறகுதான் அவருக்கு விஷயம் புரிந்திருக்கிறது.
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே
நீதிபதி சந்தோஷ் ஹெக்டே கர்நாடகாவைச் சேர்ந்தவர். கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல், மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பிறகு சொலிசிட்டர் ஜெனரல் என பல பதவிகளை வகித்தவர். 1999 ஜன.,8ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
2005 ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். பிறகு கர்நாடக அரசின் லோக் ஆயுக்தா தலைவராக பணியாற்றினார். இப்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு என்.டி.டி.வி.,க்காக இவரை பேட்டியெடுக்க முயன்றேன்.
வைத்தியநாதன் பெயரால் பேட்டி
அவருடைய வீட்டிற்கு போன் செய்து, ‘நீதிபதி ஹெக்டேவுடன் பேச வேண்டும்’ என்றேன்.
“நீங்கள் யார்,” அவருடைய செயலர் கேட்டார்.
“வைத்தியநாதன்,” என்றேன்.
“ஜஸ்ட் வெயிட் சார்,” என பதில் வந்தது.
அடுத்த 10வது நொடி, ”ஹலோ மிஸ்டர் வைத்தியநாதன்… எப்படியிருக்கிறீர்கள்? அந்த வழக்கு எப்படி போய்க்கொண்டிருக்கிறது,” என்றார் நீதிபதி ஹெக்டே.
”எந்த வழக்கு,” என்று தடுமாறிய எனக்கு, அடுத்த சில வினாடிகளில் விஷயம் புரிந்து போனது.
“சார் மன்னிக்கவும். நான் சீனியர் வக்கீல் சி.எஸ். வைத்தியநாதன் அல்ல, என்.டி.டி.வி., வைத்தியநாதன்” என்றேன், நான். “ஓஹோ… ஹலோ வைத்தியநாதன்…” என்ற அவருடைய குரலில் சிரிப்பு தெரிந்தது.
“சார்…எப்படியோ சி.எஸ்.வி., பெயரால் உங்களிடம் பேச முடிந்தது என் பாக்கியம்” என்றேன், நான்.
அடுத்த முனையில் சிரிப்பு.
“ சார்..உங்களை எங்கள் டிவிக்காக பேட்டி எடுக்க வேண்டும்” என்று கூறி, எனது கோரிக்கையை முன் வைத்தேன்.
“அப்படியா…,” என்று கேட்டவர், சில வினாடிகள் யோசித்தார்.
“சரி, நாளை மாலை 4 மணிக்கு வந்துவிடுங்கள்,” என்று கூறி விட்டார்.
அயோத்தி வழக்கு
அடுத்த நிமிடம் சீனியர் வக்கீல் வைத்தியநாதனுக்கு போன் செய்து, ”சார் உங்கள் தயவால் எனக்கு பேட்டி கொடுக்க நீதிபதி ஹெக்டே ஒத்துக்கொண்டார்,” என விவரமாக சொன்னேன். அவருக்கோ ஆனந்தம். ”எப்படியோ என் பெயர் உனக்கு உபயோகப்பட்டதே,” என்றார். பொதுவாக நீதிபதிகள் பேட்டி என்றாலே தூரமாக போய்விடுவார்கள்.
மறுநாள் என் கேமராமேன் சகிதமாக அவர் வீட்டிற்கு சென்றேன். வரவேற்று உபசரித்தார். கேட்ட கேள்விகளுக்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னார்.
மத்திய அரசு குறித்த ஒரு கேள்விக்கு அவர் சொன்ன பதில் பெரிய செய்தியானது. “எந்த ஒரு அரசும் தங்களால் தீர்க்க முடியாத விஷயம் ஒன்று இருந்தால், அதை உடனே உச்சநீதிமன்றத்தின் பக்கம் தள்ளிவிடுகிறார்கள். அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கும் அந்த ரகம்தான்,” என்றார் ஹெக்டே. இந்த செய்தியை மற்ற சேனல்களும் செய்தி நிறுவனங்களும் எங்கள் டிவியின் பெயரைச் சொல்லி செய்தியாக்கின.
சில நீதிபதிகள், செய்திதாள்களுக்கு பேட்டி கொடுக்க தயக்கத்துடன் முன் வருவார்கள். அதுவும் அந்த ரிப்போர்ட்டரை அவர்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் டிவி என்றதும் வேண்டாம் என மறுத்துவிடுவார்கள். இந்நிலையில் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே என் பேட்டிக்கு ஒத்துக்கொண்டது எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, ஆபீஸில் எனக்கு நல்ல பெயர் கிடைக்கவும் உதவியது.
நான் முதன் முதலாக பேட்டி எடுத்த உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்தோஷ் ஹெக்டேதான். அதை இன்று வரை நினைவு கூர்கிறேன்.
– அ.வைத்தியநாதன்

அ.வைத்தியநாதன், 30 ஆண்டுக்கும் மேலாக டில்லியில் செய்தியாளராக பணியாற்றியவர்.
தொடர்புக்கு: va****@*******ar.in
இந்த தொடரின் அடுத்த கட்டுரை, பிப்.,23ம் தேதி திங்கட்கிழமை காலை 7:00 மணிக்கு (இந்திய நேரம்) தினமலர் இணையதளத்தில் வெளியாகும்.
