கொழும்பு: இலங்கையில் எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் சட்ட மசோதா பார்லிமென்டில் நிறைவேறியது.
நம் அண்டை நாடான இலங்கை கடந்த சில ஆண்டுகளாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 2022-ல் உணவு, மருந்து, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், மக்கள் போராட்டங்கள் வெடித்து, அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார்.
இதையடுத்து, 2024ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட அனுர குமார திச நாயகே, மக்களின் கோபத்தை தணிக்க, அரசியல்வாதிகளின் சலுகைகளை குறைப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பரில் முன்னாள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வீட்டு வசதி, ஓய்வூதியம், வாகனம், அலுவலகம், ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.
இதை தொடர்ந்து, எம்.பி.,க்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் மசோதா நேற்று முன்தினம் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில், 154 பேர் ஆதரவாகவும், இரண்டு பேர் எதிராகவும் ஓட்டளித்தனர்; மற்றவர்கள் பங்கேற்கவில்லை.
இந்த மசோதாவின்படி, ஏற்கனவே ஓய்வூதியம் பெற்று வருபவர்கள் உட்பட அனைவருக்கும் ஓய்வூதியம் உடனடியாக நிறுத்தப்படுகிறது. இதன் மூலம், 49 ஆண்டுகள் பழமையான இலங்கை பார்லிமென்ட் ஓய்வூதிய சட்டம் முழுதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
