ஏஐ செயலியை உருவாக்குங்கள்: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

புதுடில்லி: ‘‘இந்தியாவை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஏஐ செயலிகளின் மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏஐ தொடர்பான செயலிகளை வடிவமைக்க இளைஞர்கள் அனைவரையும் அழைக்கிறேன்” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


டில்லி பாரத் மண்டபத்தில் நடந்த ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் மிகப்பெரிய இளைஞர்கள் படையுள்ளது. இந்தியா புதிய தொழில்நுட்பங்கள் உருவாக்குவது மட்டுமல்லாமல், அதை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வருகிறது. இளைஞர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை நம்பிக்கையுடன் ஏற்றுகொள்கிறார்கள். ஏஐ தொழில்நுட்ப துறையில் இந்தியாவிற்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது.

இந்தியாவை சேர்ந்த 3 நிறுவனங்கள் ஏஐ செயலிகளின் மாதிரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவே நமது இளைஞர்களின் சக்தி. ஏஐ தொடர்பான செயலிகளை வடிவமைக்க அனைவரையும் அழைக்கிறேன். ஏஐ தொழில்நுட்பம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி. அது நன்றாக நன்றாகப் பயன்படுத்தினால், அது தீர்வுகளைத் தரும்.

போலியான பதிவுகள் மக்கள் மத்தியில் சமூக ஊடகம் மீது நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது. சிலர் ஏஐ தொழில்நுட்பத்தை கண்டு அஞ்சுகிறார்கள். சிலர் அதில் தனது சிறப்பான எதிர்காலத்தை உருவாக்குகின்றனர். ஏஐ தொழில்நுட்பம் எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இந்த தொழில்நுட்பம் நமது வேலைகளை சிறந்ததாகவும், திறமையாகவும் மாற்றும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

பிரான்ஸ் அதிபர் பேச்சு

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாவது: இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்களுக்கும் டிஜிட்டல் அடையாளத்தை அரசு வழங்கி உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய ஏஐ தொழில்நுட்பமே தேவை.

இளம் தலைமுறையினர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது நமது கடமை. பல்வேறு துறைகளிலும் புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கு மனித குலத்துக்கு ஏஐ தொழில்நுட்பம் துணை நிற்கும். ஏஐ தொழில்நுட்பத்தின் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளையும் சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு இமானுவேல் மேக்ரான் பேசினார்.

Source link