புதுடில்லி: ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது.
அனில் திருபாய் அம்பானி குழுமம் 40,000 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு குறித்து முழுமையாக விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பிறகு சிறப்பு விசாரணை குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, நிறுவனத்தின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள், சந்தேகத்துக்குரிய நிதி பரிவர்த்தனைகள், நிர்வாகிகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உள்ளது. இந்த பண மோசடி வழக்கில், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கு பிப்ரவரி 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பி உள்ளது.
இந்த வழக்கில், அனில் அம்பானி மனைவி, டினா அம்பானியும் இரண்டு முறை ஒத்திவைப்பு கோரியுள்ளார், மேலும் பிப்ரவரி 10 மற்றும் பிப்ரவரி 17ம் தேதிகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அனில் அம்பானி ஒருமுறை அமலாக்கத் துறையின் முன் ஆஜரானார். இதன்பிறகு அமலாக்கத்துறை அளிக்கும் சம்மனுக்கு பதில் அளிக்காமல் அனில் அம்பானி புறக்கணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
