சென்னை: தமிழகத்தில் தான் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு அதிகமாக உள்ளது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன என சட்டசபைபில் நயினார் நாகேந்திரன் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
கடந்த 17ம் தேதி 2026 – 2027ம் ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. இன்று சட்டசபையில் பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் 7.51% அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று நயினார் நாகேந்திரன் கூறினால், மணிப்பூரையும் அதில் சேர்த்து சொல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது, பெண்களுடைய பாதுகாப்பும், ஆங்காங்கே நடைபெறக்கூடிய கலவரங்களும், குழந்தைகளுடைய பாதுகாப்பும் தமிழகத்தில் தான் அதிகமாக இருக்கிறது என்று மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன.
பாஜ ஆளும் மாநிலங்களில்தான் இன்றைக்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருக்கிறது என்பதையும் ஆதாரங்களுடன் விளக்கத் தயாராக இருக்கிறேன். அதனை ஏற்றுக்கொள்ள உறுப்பினர் தயாராக இருக்கிறாரா? இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
