மனைவியை கணவன் அடிக்கலாம்: ஆப்கனில் அமலுக்கு வந்தது புது சட்டம்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆண்கள் தங்கள் மனைவிகளை அடிக்க சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு புதிய விளக்கத்தை தரும் சட்டத்தை தலிபான் அரசு கொண்டு வந்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் ஆட்சியைக் கைப்பற்றிய தலிபான்கள், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். படிக்கக் கூடாது, வேலைக்கு போகக் கூடாது, தனியாக வெளியே செல்லக் கூடாது என, பல கட்டுப்பாடுகள் உள்ளன.தற்போது புதிய சட்டம் ஒன்றை தலிபான் அரசு கொண்டு வந்தது.

அதன்படி, குடும்ப வன்முறையில் குடும்ப ஆண்கள் தங்கள் மனைவி அல்லது குழந்தைகளை அடிக்க சட்டப்பூர்வ அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்படும் நபரைப் பொறுத்து தண்டனையும் மாறுகிறது. மத குருமார்களுக்கு எந்த விதமான குற்றவியல் சட்டங்களும் பொருந்தாது. சாதாரண பொது மக்களுக்கு மட்டுமே இந்த சட்டங்கள் பொருந்தும்.

இதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்திற்கு அந்நாட்டு முஸ்லிம் மதக் குழுவின் தலைவர் ஹிபதுல்லா அகுந்த்சாடா ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி, பெண்களை அடிக்கும்போது காயம் தெரியாமலும், எலும்பு முறியாமலும் அடிக்க வேண்டுமாம்.

அதே சமயம் கடுமையான குடும்ப வன்முறை சம்பவங்களில் எலும்பு முறிவுகள் அல்லது காயங்களை ஏற்படுத்தினால், கணவருக்கு 15 நாட்கள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

Source link