தஞ்சாவூர் : மதுக்கூரில், அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க., கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டு

தஞ்சாவூர் : மதுக்கூரில், அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க., கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ள விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வடக்கு பகுதியில், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில், தி.மு.க., மதுக்கூர் வடக்கு கிளை அலுவலகம், பிப்., 11ம் தேதி திறக்கப்பட்டது. மேலும், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், கட்சி தலைவர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கோவில் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என ஹிந்து முன்னனி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட செயலர் ராஜ்குமார், ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்கு மனு அனுப்பியுள்ளார்.

இது குறித்து ராஜ்குமார் கூறியதாவது: ஹிந்துசமய அறநிலையத்துறை சட்டத்திற்கும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மத நிறுவன பாதுகாப்பு பிரிவுகளுக்கும் எதிரான செயல். கட்சி அலுவலகம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளது. மேலும், அண்ணாதுரை, ஈ.வே.ரா., கருணாநிதி சிலைகள், நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன. உடனே, இது குறித்து அறநிலையத்துறை, நெடுஞ்சாலைத்துறை விசாரணை நடத்தி கட்சி அலுவலகம், சிலைகளை அகற்ற வேண்டும். கட்சி அலுவலகத்தை அகற்ற தவறினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், ‘இடத்தினை அளவீடு செய்து, விசாரித்து வருகிறோம். ஏற்கனவே, கோவில் இடத்தில் உள்ள நபர், கட்சி அலுவலமாக மாற்றியுள்ளாரா அல்லது கட்சி அலுவலகத்திற்கு வாடகைக்கு விட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

தி.மு.க., அலுவலகத்தினை உயர்கல்வித்துறை அமைச்சர் செழியன், எம்.பி., முரசொலி, திருவையாறு எம்.எல்.ஏ., சந்திரசேகரன், பட்டுக்கோட்டை எம்.எல்.ஏ., அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில், திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கல்வெட்டு அமைக்கப்பட்டு, விளம்பரம் செய்யப்பட்டன.

இந்நிலையில், கோவில் இடத்தில் கட்சி அமைந்துள்ளது தொடர்பாக சர்ச்சை எழுந்ததால், அமைச்சர், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் நிகழ்ச்சியை ரத்து செய்ய கூறி, கட்சியினர் மூலம் சத்தமில்லாமல் திறந்து விட்டனர்.

Source link