சென்னை: 'கவர்னரை தேர்வு செய்யவும், நீக்கவும் மாநில சட்டசபைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசியலமைப்பு

சென்னை: ‘கவர்னரை தேர்வு செய்யவும், நீக்கவும் மாநில சட்டசபைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்’ என, மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்த, நீதிபதி குரியன் ஜோசப் குழு பரிந்துரைத்துள்ளது.

மத்திய – மாநில உறவுகள் குறித்து ஆராய, ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில், தமிழக அரசு குழு அமைத்தது. இக்குழு தன் முதல்கட்ட அறிக்கையை, தமிழக அரசுக்கு அளித்தது. இந்த அறிக்கை, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* பார்லிமென்ட், சட்டசபைகளில், மூன்று மாதங்களுக்கு முன்னதாக, பொது மக்களின் கருத்து கேட்டு, ஆலோசனை பெறாமல் எந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவையும் அறிமுகம் செய்யக் கூடாது. இதற்காக அரசியலமைப்பு சட்டத்தில் உட்பிரிவை சேர்க்க வேண்டும்.

* புதிதாக யூனியன் பிரதேசங்களை உருவாக்குவதை தடை செய்ய வேண்டும். டில்லி தேசிய தலைநகர் பகுதி தவிர்த்து, தற்போதுள்ள யூனியன் பிரதேசங்களில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். அந்த ஓட்டெடுப்பில், சம்பந்தப்பட்ட பகுதி, அண்டை மாநிலத்துடன் இணைவதற்கோ, தனி மாநிலமாக உருவாவதற்கோ வாய்ப்பு வழங்க வேண்டும்.

* ஒரு புதிய மாநிலத்தை உருவாக்குவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்த, ஜனாதிபதிக்கு பரிந்துரைப்பதற்கு முன், பாதிக்கப்பட்ட மாநில சட்டசபையின் ஒப்புதலை பெற வேண்டும். சம்பந்தப்பட்ட மாநில சட்டசபை ஒப்புதலை நிறுத்தி வைத்தால், பாதிக்கப்பட்ட பகுதியில் பொது ஓட்டெடுப்பு நடத்த, ஜனாதிபதி உத்தரவிட வேண்டும்.

* மொத்த வாக்காளர்களில் நான்கில் மூன்று பங்கினர் பங்கேற்று, அதில் மூன்றில் இரண்டு பங்கினர் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே, ஓட்டெடுப்பு வெற்றி பெறும். இதற்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்.

* ஆட்சி மொழிகள் சட்டத்தை சார்ந்து இருக்கும் நிலையை நீக்கி, ஆங்கிலத்தை மத்திய அரசின் நிரந்தர ஆட்சி மொழியாக நிலைநிறுத்த, அரசியலமைப்பு சட்டம் பிரிவு, 343ஐ திருத்த வேண்டும். ஐரோப்பிய யூனியன் மாதிரியின் அடிப்படையில், மொழிப்பன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக, அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும், ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும். நவீன மொழி பெயர்ப்பு கருவிகள், இதை முழுமையாக சாத்தியமாக்குகின்றன.

* மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில், பெரும்பான்மையினரால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று பேர்களில் ஒருவரை, அந்த மாநிலத்தின் கவர்னராக, ஜனாதிபதி நியமிக்கும் வகையில், அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும்.

* ஒரே ஒரு முறை, புதுப்பிக்க இயலாத வகையில், கவர்னருக்கு ஐந்தாண்டு பதவிக் காலம் வழங்க வேண்டும். அதன்பின், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி பதவி தவிர, வேறு எந்த அரசியலமைப்பு சட்ட பதவிக்கும், அவர் தகுதியற்றவர் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

* ஒரு கவர்னரின் பதவிக் காலம் முடிந்த பின்னும், அவர் தொடர அனுமதிக்கும் முறையை நீக்க வேண்டும். புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரை, அந்த பொறுப்புகளை, அந்த மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகிக்க வேண்டும்.

* மாநில சட்டசபையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் வழியாக மட்டுமே, கவர்னரை நீக்க வழிவகை செய்ய வேண்டும். இந்த தீர்மானத்தின் மீது, 14 நாட்களுக்குள், ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தற்போதுள்ள தகுதிகளுடன் கூடுதலாக, கவர்னர் அந்த மாநிலத்தை சாராதவராகவும், பொது வாழ்க்கையில் குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் ஆளுமையாகவும் இருக்க வேண்டும். முந்தைய ஐந்தாண்டுகளில், அவர் எந்த அரசியல் கட்சியிலும், ஆட்சி நிர்வாகம், சட்டசபை, நீதித்துறை ஆகியவற்றிலும் எந்த பதவியும் வகித்து இருக்க கூடாது.

* கவர்னருக்கான அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல் ஆவணம், அரசியலமைப்பு சட்டத்தில் இணைக்கப்பட வேண்டும். அதில் தேர்தல்கள், அமைச்சரவை பதவி விலகல், நம்பிக்கையில்லா தீர்மானம், ஆட்சி அமைக்க உரிமை கோரல், சட்டசபை கூட்டுதல், ஒத்திவைத்தல், கலைத்தல் தொடர்பான நெறிமுறைகளை சேர்க்கப்பட வேண்டும்.

* மாநில பட்டியல் சார்ந்த மசோதாக்களை, ஜனாதிபதி பரிசீலனைக்கு என, கவர்னர்கள் ஒதுக்கி வைக்கக் கூடாது. இதில், 15 நாட்களுக்குள் செயல்பட வேண்டும்; சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அடுத்த, 15 நாட்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

* கட்சி தாவியவர்களை, அமைச்சர் பதவியில் இருந்தோ அல்லது ஊதியம் தரும் பதவிகளில் இருந்தோ தடுத்தால் மட்டும் போதாது. பதவி இழப்பையும் தாண்டி, அரசியல் வாழ்க்கையில் ஒரு தற்காலிக தடையை ஏற்படுத்த வேண்டும். கட்சி மாறியதற்காக தகுதி நீக்கம் செய்யப்படும் நபர்கள், பார்லிமென்ட், சட்டசபை, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், ஆறாண்டுகள் போட்டியிட தகுதியற்றவர்களாக அறிவிக்க வேண்டும்.

* பொருளாதார சீர்திருத்தம் போன்று, கல்வித் துறைக்கும் தீர்க்கமான மாற்றம் தேவைப்படுகிறது. மிதமிஞ்சிய மத்திய அரசின் ஒழுங்குமுறைகளை திரும்ப பெற வேண்டும். உண்மையான சுயாட்சி என்பது பல்கலையிடமே இருக்க வேண்டும். முதல்கட்டமாக, 100 பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை, பல்கலை மானிய குழு மற்றும் இதர ஒழுங்குமுறை அமைப்புகளின் கண்காணிப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.

* மாநில அரசுகளால் நிறுவப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, நிர்வகிக்கப்படும் கல்வி நிறுவனங்களில், மாணவர் சேர்க்கை முழுதும், மாநிலத்திடம் அல்லது பல்கலையிடம் மட்டுமே இருக்க வேண்டும். தரங்களை பேணுதல் என்ற போர்வையில், இந்த அதிகாரத்தை மத்திய அரசு அபகரிக்கக் கூடாது.

* தேசிய தேர்வு முகமையான என்.டி.ஏ., கலைக்கப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பு, 2018ம் ஆண்டுக்கு முன்னர் இருந்தது போன்று, அந்தந்த முகமைகளிடம் ஒப்படைக்க வேண்டும்.

* ஜி.எஸ்.டி., கவுன்சிலை, கூட்டாட்சி தத்துவ அடிப்படையில், மீண்டும் சீரமைக்க வேண்டும். அதில் முடிவுகள் எடுக்கும்போது, வருகை, புறக்கணிப்பு ஆகியவற்றை தெளிவுபடுத்துவதுடன், ஓட்டளிப்பு நடைமுறையையும் மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

இத்துடன், லோக்சபா, சட்டசபை தொகுதிகள் மறுவரையறை, தேர்தலில் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை பகுதியளவில் சேர்ப்பது உட்பட பல்வேறு பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

Source link