பரிதாபாத்: ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒருவர் தனது 100 கிராம் தங்கத்தை தவறுதலாக பழைய பேப்பர் என்று நினைத்து விற்க, 4 மாதங்களுக்குப் பிறகு உரிமையாளருக்கு திரும்ப ஒப்படைத்துள்ள நிகழ்வு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நேர்மையான அந்த வியாபாரியை போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தை சேர்ந்த அசோக் சர்மா என்பவர் தனது குடும்ப நகைகளை ஒரு பையில் வைத்து மறைத்து வைத்திருந்தார். தீபாவளிக்காக வீட்டை சுத்தப்படுத்தும் போது, அந்த பை பழைய பொருட்கள் என்று நினைத்து பழைய பேப்பர் கடைக்கு விற்கப்பட்டது.
இது நடந்து 4 மாதங்கள் சென்ற பிறகு பழைய பொருட்கள் வாங்கும் வியாபாரி ஹாஜி அக்தர் கான், தன்னிடம் இருந்த பொருட்களை பிரிக்கும் பணியில் ஈடுபட்ட போது பையில் இருந்த தங்க நகைகளை கண்டுபிடித்தார். அது 100 கிராம் எடை கொண்டது. அதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.
இந்த நகைகளை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று எண்ணிய ஹாஜி அக்தர் கான், உடனே போலீஸ் ஸ்டேஷனில் தொடர்பு கொண்டார். பிறகு ஏசிபி ஜித்தேஷ் மல்ஹோத்ரா முன்னிலையில் நகைகளை அசோக் சர்மா குடும்பத்திடம் ஒப்படைத்தார்.
நேர்மையாக செயல்பட்டஹாஜி அக்தர் கானை போலீஸ் அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.
