ஆப்கானிஸ்தான் அணி அபாரம்: கனடா அணிக்கு 4வது தோல்வி

சென்னை: ‘டி-20’ உலக கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, 82 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. கனடா அணி தொடர்ச்சியாக 4வது தோல்வியை சந்தித்தது.

சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ‘டி-20’ உலக கோப்பை தொடருக்கான ‘டி’ பிரிவு லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான், கனடா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற கனடா அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜத்ரன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. திலன் ஹெய்லிகர் வீசிய 4வது ஓவரில், இப்ராஹிம் 2, குர்பாஸ் ஒரு பவுண்டரி அடிக்க 15 ரன் கிடைத்தது.

முதல் விக்கெட்டுக்கு 47 ரன் சேர்த்த போது ஜஸ்கரன் சிங் பந்தில் குர்பாஸ் (30 ரன், 5×4) அவுட்டானார். ஜஸ்கரன் ‘வேகத்தில்’ குல்பதின் நைப் (1) வெளியேறினார். ‘பவர்-பிளே’ ஓவரின் (1-6) முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 49/2 ரன் எடுத்திருந்தது.

சாத் பின் ஜாபர் வீசிய அடுத்தடுத்த ஓவரில் (8, 10) தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட இப்ராஹிம் ஜத்ரன், 33 பந்தில் அரைசதம் எட்டினார். இவருக்கு, செடிகுல்லா அடல் ஒத்துழைப்பு கொடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 15 ஓவரில், 131/2 ரன் எடுத்திருந்தது.

மூன்றாவது விக்கெட்டுக்கு 95 ரன் சேர்த்த போது ஜஸ்கரன் சிங் பந்தில் செடிகுல்லா (44) அவுட்டானார். ஜஸ்கரன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய அஸ்மதுல்லா உமர்சாய் (13) நிலைக்கவில்லை. கலீம் சனா, திலன் ஹெய்லிகர் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய இப்ராஹிம், ஜஸ்கரன் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார்.

ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 200 ரன் எடுத்தது. இப்ராஹிம் ஜத்ரன் (95 ரன், 5×6, 7×4), ரசூலி (4) அவுட்டாகாமல் இருந்தனர்.

கடின இலக்கை விரட்டிய கனடா அணிக்கு யுவராஜ் சாம்ரா (17), கேப்டன் தில்பிரீத் சிங் (13) ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. நிக்கோலஸ் கிர்டன் (10), ஷ்ரேயஸ் மோவா (2) நிலைக்கவில்லை. ஹர்ஷ் தாக்கர் (30), சாத் பின் ஜாபர் (28) ஓரளவு கைகொடுத்தனர்.

கனடா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 118 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஜஸ்கரன் (7), அன்ஷ் படேல் (2) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் நபி 4, கேப்டன் ரஷித் கான் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இது அதிகம்

‘டி-20’ உலக கோப்பை அரங்கில் ஆப்கானிஸ்தான் அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை (200/4) பதிவு செய்தது. இதற்கு முன், 2021ல் சார்ஜாவில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 190/4 ரன் எடுத்ததே அதிகம்.

* ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில், ஒரு இன்னிங்சில் அதிக ரன் விளாசிய ஆப்கானிஸ்தான் வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் இப்ராஹிம் ஜத்ரன் (95). இதற்கு முன், சமீபத்தில் ஆமதாபாத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், 84 ரன் எடுத்திருந்தார்.

Source link