சென்னை: தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் முதலீட்டை தமிழ கத்துக்கு ஈர்க்க, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அறிவுசார் வழித்தடம் அமைக்கும் பணியில், ‘டிட்கோ’ ஈடுபட்டுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, சர்வதேச திறன் மையம் போன்ற துறைகளில், பல நாடுகளின் முன்னணி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
தமிழகத்தின் முக்கிய தொழில் மையமாக கிருஷ்ணகிரி மாவட்டம் உருவெடுத்துள்ளது.
எனவே, பெங்களூருவுக்கு போட்டியாக, அதன் அருகில் உள்ள ஓசூரில், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் செயல்பாடுகளை உள்ளடக்கிய அறிவுசார் வழித்தடம் ஓசூரில் அமைக்கப்பட உள்ளது.
இதற்காக, ஓசூரை சுற்றியுள்ள அவுட்டர் ரிங் ரோடு, சேட்டிலைட் டவுன் ரிங் ரோடு, பாகலுார் பைபாஸ் சாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.
இதற்கு விரிவான அறிக்கை தயாரிக்கும் பணிக்கான ஆணையை, ‘ஏகாம் – ஏஇசிஓஎம்’ என்ற நிறுவனத்திற்கு டிட்கோ வழங்கியுள்ளது.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெங்களூருவில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால், அங்குள்ள பல நிறுவனங்கள், விரிவாக்க திட்டங்களை மற்ற மாநிலங்களுக்கு மாற்ற உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது.
‘எனவே தான், பெங்களூருவுக்கு அருகில் உள்ள ஓசூரில் தொழில் முதலீடுகளை ஈர்க்க முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது’ என்றார்.
