கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 3-0 என, வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தியது.
அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) 12வது சீசன் நடக்கிறது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. கோல்கட்டாவில் நடந்த லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஈஸ்ட் பெங்கால் அணிக்கு யூசுப் எஸ்செஜ்ஜாரி (65, 70வது நிமிடம்) 2 கோல் அடித்து கைகொடுத்தார். தொடர்ந்து அசத்திய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+2வது நிமிடம்) மிகுவல் பிகுவேரா ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய வடகிழக்கு யுனைடெட் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் ‘நடப்பு சாம்பியன்’ மோகன் பகான், பெங்களூரு, ஜாம்ஷெட்பூர், ஈஸ்ட் பெங்கால் அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. வரும் பிப். 19ல் மும்பையில் நடக்கவுள்ள லீக் போட்டியில் மும்பை, சென்னை அணிகள் மோதுகின்றன.
