ஏ.ஐ மாநாடு 2026: ஏ.ஐ., துளிகள்

டில்லியில் நடைபெறும் ஏ.ஐ., இம்பாக்ட் 2026 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்களும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்று உரையாற்றினர். இன்றும் நாளையும் வழக்கமான கண்காட்சி மற்றும் நிகழ்வுகளில் பொதுமக்கள், நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.

ஜனநாயகப்படுத்த வேண்டும்
ஏ.ஐ., பயன்பாட்டை ஜனநாயகப்படுத்துவது மட்டும்தான், நியாயமான மற்றும் பாதுகாப்பான வழியாக இருக்கும். மனிதகுலம் தழைப்பதற்கும் இதுவே சிறந்த வழி. நவீன ஏ.ஐ., மாடல்களில் இந்தியாவின் தலைமைத்துவத்தை பார்ப்பதற்கு வியப்பாக உள்ளது. கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக, நான் இங்கு வந்தபோது இருந்த நிலையை விட, ஏ.ஐ., துறையில் இந்தியா தற்போது சிறப்பான முன்னேற்றங்களை கண்டுள்ளது. – சாம் ஆல்ட்மேன், சி.இ.ஓ., ஓபன் ஏ.ஐ.,

ரூ.10 லட்சம் கோடி முதலீடு

ஜியோ, ரிலையன்ஸ் நிறுவனங்கள் இணைந்து, அடுத்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் ஏ.ஐ., துறையில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யும். இந்தியாவால் அறிவாற்றலை வாடகைக்கு வாங்க முடியாது. எனவே, ஜியோ வாயிலாக எப்படி இணையதள பயன்பாட்டுக்கான செலவை குறைத்தோமோ, அதேபோல அறிவாற்றலுக்கான செலவையும் குறைப்போம். – முகேஷ் அம்பானி, தலைவர், ரிலையன்ஸ் குழுமம்

இந்தியாவில் அதிக தாக்கம்

இந்தியாவின் அதிக மக்கள்தொகை காரணமாக, அடுத்த சில ஆண்டுகளில் ஏ.ஐ.,யின் தாக்கம் மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இங்கு மிக அதிகமாக இருக்கும். தரவு, தனியுரிமை மற்றும் பாதுகாப்பில் சர்வதேச அளவில் இந்தியா தலைமை வகிக்க முடியும். அதேபோல, அதிகப்படியான மக்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை எளிதாக கொண்டு சேர்க்கக்கூடிய வாய்ப்பும் உள்ளது. – சாந்தனு நாராயண், தலைவர், அடோப்

மிகப்பெரிய மாற்றம்

ஏ.ஐ., தொழில்நுட்பம் தான் நம் வாழ்நாளில் ஒரு மிகப்பெரிய மாற்றம். பல புதிய கண்டுபிடிப்புகளுக்கும், அதீத முன்னேற்றத்துக்கும் மிக அருகில் இருக்கிறோம். நம்பிக்கையுடனும், பொறுப்புணர்வுடனும் அனைவருக்குமான ஏ.ஐ., உருவாக்க, இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். இந்தியாவையும், அமெரிக்காவையும் இணைக்கும் வகையில், புதிதாக நான்கு கடல் வழி கேபிள் இணைப்பு திட்டங்களை கூகுள் அமைக்க உள்ளது.

– சுந்தர் பிச்சை, சி.இ.ஓ., கூகுள்

வேலை இழப்பு
பாரம்பரிய வேலை முறைகளில் ஏ.ஐ., மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சி காரணமாக, திரும்ப திரும்ப செய்யக்கூடிய மற்றும் தானியங்கி முறையில் செய்து முடிக்கும் வேலைகள் இல்லாமல் போகும். எனவே அரசுகள், பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது, கல்வி முறையில் சீர்திருத்தங்கள் கொண்டு வருவது, கொள்கை ரீதியான கட்டமைப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.
– ரிஷி சுனக், முன்னாள் பிரதமர், பிரிட்டன்

சவால்களை எதிர்கொள்வோம்

ஏ.ஐ., வரவால் இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் எதிர்கொண்டு உள்ள சவால்களை மத்திய அரசு உணர்ந்துள்ளது. இதை கடந்து வர, தொழில்துறையினருடனும், கல்வி நிறுவனங்களுடனும் இணைந்து, இந்த புதிய அறிவாற்றல் யுகத்துக்கு ஏற்றாற்போல், பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு, மறுதிறன் பயிற்சிகள் வழங்கவும், திறமையான பணியாளர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. – அஸ்வினி வைஷ்ணவ், மத்திய அமைச்சர்

இணைய மறுத்த கைகள்

ஏ.ஐ., மாநாட்டில் பிரதமர் மோடியுடன் உலகின் முன்னணி ஏ.ஐ., நிறுவனங்களின் சி.இ.ஓ.,க்கள் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது மேடையில் இருந்த அனைவரும், ஒருவர் கையை ஒருவர் பிடித்த நிலையில், ஓப்பன் ஏ.ஐ., – சி.இ.ஓ., சாம் ஆல்ட்மேன் மற்றும் ஆந்த்ரோபிக் சி.இ.ஓ., டாரியோ அமோடேய் கையை பிடிக்க விரும்பாமல், தங்களது கைகளை தனித்தனியே உயர்த்தினர். இந்த செயல் இணையத்தில் உடனடியாக பேசுபொருளானது.
ஓப்பன் ஏ.ஐ., நிறுவனத்தின் ஆராய்ச்சி பிரிவு துணை தலைவராக பணியாற்றி வந்த அமோடேய், கடந்த 2021ல் இந்நிறுவனத்திலிருந்து விலகினார். இதன் பின், ஓப்பன் ஏ.ஐ.,யின் இன்னும் சில மூத்த ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஆந்த்ரோபிக் நிறுவனத்தை துவங்கினார்.

Source link