மதுரை: விதவிதமான ஆன்லைன் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டு மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களை

மதுரை: விதவிதமான ஆன்லைன் விளையாட்டுகள் உருவாக்கப்பட்டு மாணவர்களை அடிமைப்படுத்தி, அவர்களை குற்றவாளிகளாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அலைபேசியை தகவல் தொடர்புக்கு மட்டுமின்றி பல்வேறு விஷயங்களுக்கும் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆன்லைன் விளையாட்டுகள் மாணவர்களை திசைதிருப்பி குற்றவாளிகளாக மாற்ற முயற்சிக்கின்றன.

துவக்கத்தில் பிற விளையாட்டுகள் போலத்தான் ஆன்லைன் விளையாட்டுகளும் இருக்கின்றன. பள்ளியில், கல்லுாரியில் இருக்கும் மாணவர்கள் சிலர் அவரவர் இடத்திலிருந்து ஒன்றிணைந்து விளையாட துவங்குகின்றனர். பின்னர் படிப்படியாக அவர்களுக்கு ‘டாஸ்க்’ தரப்படுகிறது. முதலில் எளிமையான ‘டாஸ்க்’குள் தரப்படும். இந்த கேமில் ஜெயித்தால் இத்தனை டைமண்ட் பாயின்ட் என துவங்கும்.

ஆசைகாட்டி படிப்படியாக டாஸ்க் அதிகரிக்கப்படும். பின்னர் வன்முறை பாதைக்கு மாறுகிறது. உடன் உள்ள நண்பரை டீஸ் செய்ய டாஸ்க் தரப்படுகிறது. அதில் துவங்கி அவரை கொலை செய்யவும் துாண்டுகிறது. கொலைக்கான கருவிகளாக துப்பாக்கி, வில் அம்பு போன்றவற்றை அந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமே விற்கிறது. இதை வாங்க சில டைமண்ட் பாயின்ட்கள் தேவை.

அவற்றை வாங்க பணம் செலுத்த வேண்டும். இவ்வளவு கட்டணம் செலுத்தினால் இவ்வளவு டைமண்ட் பாயின்ட் என வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அதுவும் குறைந்த விலைக்கு தரப்படும். அதன்பின் ஒவ்வொரு ஸ்டேஜாக இவர்கள் முன்னேற முன்னேற டைமண்ட் பாயின்ட்களின் விலை அதிகரிக்கிறது.

ஆரம்பத்தில் பெற்றோர் சிறிய தொகை தானே என பிள்ளைகளுக்கு கொடுக்கின்றனர். தொகை அதிகரிக்கும் போது மறுக்கின்றனர். விளையாட்டுக்கு அடிமையாகிவிட்ட மாணவர்களோ வீட்டில் இருந்தும், ஏ.டி.எம். கார்டு மூலமும் பணத்தை திருடி டைமண்ட் பாயின்ட்களை வாங்குகின்றனர்.

அவரவர் அலைபேசியை விளையாட பயன்படுத்தினாலும் விளையாடுவதற்கு தனியாக ஐடி, பாஸ்வேர்டு உண்டு. அதற்கான கட்டணமும் தனியாக ரீசார்ஜ் மூலம் செய்ய வேண்டும். இவர்களுக்கு பெற்றோரால் வழங்கப்பட்டுள்ள அலைபேசியில் இருந்து விளையாட்டுக்கு ரீசார்ஜ் செய்தால் தெரிந்து விடும் என்பதால் வீட்டில் இருந்து பணத்தை திருடி அலைபேசி கடைகளில் ரீசார்ஜ் செய்கின்றனர்.

சில அலைபேசி கடைகள் இதையே முழுநேர தொழிலாக செய்கின்றனர். அதில் அவர்களுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. 200 ரூபாய் பெற்றுக்கொண்டு 160 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்கின்றனர். விளையாட்டுக்கு அடிமையான வெறியால் மாணவர்களும் கண்டுகொள்வதில்லை. பல நாட்களுக்கு பிறகு பெற்றோருக்கு தெரியும் போது நிலைமை எல்லை மீறி போய்விடுகிறது. படிப்பு, பிற செயல்பாடுகள் என அனைத்தும் பாதிக்கப்பட்டு மாணவர் மனநோய் பாதித்தவர் போன்று மாறிவிடுகிறார்.

எனவே தங்கள் குழந்தைகளிடம் அலைபேசியை தரும் பெற்றோர் அதில் அவர்களின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்ப முடியும். மாணவர்களை மனநோயாளியாக்கும் இதுபோன்ற விளையாட்டுளுக்கு ரீசார்ஜ் செய்யும் அலைபேசி கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை விட வேண் டும்.

மாணவிகளுக்கு வேறு விதம்

மாணவர்களுக்கு இத்தகைய விளையாட்டுகள் என்றால் மாணவிகளுக்கு வேறு விதமான விளையாட்டுகள் உள்ளன. அதில் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி நிர்வாண போஸ் கொடுக்கும் அளவிற்கு கொண்டு செல்கின்றன. அதன் பின் அதை வைத்து மாணவிகளை மிரட்டி வேறு செயல்களுக்கு பயன்படுத்துகின்றனர். பெண் குழந்தைகள் நலன் கருதி இது போன்றவற்றை பெற்றோர் வெளியே சொல்வதில்லை.

‘ஐடி’க்கும் விலை

விளையாட்டில் படிப்படியாக முன்னேறி ஒரு நல்ல நிலையை அடைந்த மாணவரின் ஐ.டி.,யை விற்கவும் முடியும். அதற்கு மாணவர்களிலேயே சிலர் உள்ளனர். குறைந்தது 15 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அந்த மாணவர் முடித்த டாஸ்க், டைமண்ட் பாயின்ட்கள் அடிப்படையில் விலை போகிறது. விற்ற மாணவர் மீண்டும் புது ஐ.டி துவங்கி அதில் டாஸ்க் நிறைவேற்றுவதை ஆரம்பிக்கிறார்.

போதையும் விற்பனை

விளையாட்டுக்கு அடிமையான மாணவர் களுக்கு ஒவ்வொரு டாஸ்க்காக தரப்படும். அதில் இவர் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அங்கு ஒருவர் தரும் பொருளை பெற்று அதை மற்றொருவரிடம் ஒப்படைப்பதும் ஒரு டாஸ்க். இதில் கொடுப்பவர் யார், கொடுத்தது என்ன, பெற்றுக்கொண்டவர் யார் என எதுவுமே அந்த மாணவருக்கு தெரியாது. இதன் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அனுப்பப்படுகின்றன.
அண்மையில் மதுரையில் ஒரு பள்ளியில் மாணவரின் பையில் சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவரிடம் விசாரித்தபோது டாஸ்க் விஷயமும் அதை பள்ளிக்கு வெளியே நின்ற ஒருவர் கொடுத்ததும் தெரியவந்தது. தன்னிடம் இருக்கும் பொட்டலத்தில் இருப்பது கஞ்சா என்ற விபரமே மாணவருக்கு தெரியவில்லை.
இந்த டிரான்ஸாக்ஷனை முடித்தால் எனக்கு 50 டைமண்ட் பாயின்ட் கிடைக்கும், அதனால் செய்தேன் என அப்பாவியாக மாணவர்கள் கூறியதும் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர். மாணவர் நலன், பள்ளியில் பெயர் கெடும் என்பதால் இதை அப்படியே மூடி மறைத்தும் விட்டனர்.

Source link