சென்னை: தமிழகத்தில் வான்வெளி, ராணுவம், விண்வெளி ஆகிய துறைகளில், 1,700 கோடி ரூபாய் முதலீடு செய்ய பி.எம்.ஐ., இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட்ஸ், சிம்வாயு, டைச்சான் குளோபல், இன்பவுண்ட் ஏரோஸ்பேஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் சென்னையில் நேற்று தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
அதன்படி, பி.எம்.ஐ., இன்ஜினியரிங், 500 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ஸ்ரீபெரும்புதுாரில் வான்வெளி உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.
சிம்வாயு நிறுவனம், சென்னை அருகில், 600 கோடி ரூபாய் முதலீட்டில், 350 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், விமான பயிற்சி தொழில்நுட்ப மையத்தை அமைக்கிறது.
டைச்சான் குளோபல் நிறுவனம், 500 கோடி ரூபாய் முதலீட்டில், 550 வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், துாத்துக்குடியில் வெடிமருந்து உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.
புத்தொழில் நிறுவனமான இன்பவுண்ட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், சென்னையில், 100 கோடி ரூபாய் முதலீட்டில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய விண்கல சாதனங்களை உற்பத்தி செய்யும் ஆலையை அமைக்க உள்ளது.
