சென்னை: ‘தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், 59.70 சதவீதமாக உயர்ந்துள்ளது’ என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டதாக, சட்டபையில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
அதற்கு, ‘மணிப்பூரை பார்; மத்திய அரசின் தரவை பார்’ என, வாய் சவடால் விட்ட முதல்வர் ஸ்டாலின், முதலில் அவரது அரசின் காவல் துறை வெளியிட்ட கொள்கை விளக்க குறிப்பை பார்க்க வேண்டும்.
கடந்த 2020 உடன் ஒப்பிடும்போது, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59.70 சதவீதமாக உயர்ந்து, பெண்கள் நடமாட்டத்தையே கேள்விக் குறியாக்கி உள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்கள், 125.50 சதவீதமாக அதிகரித்து, அவர்களின் பாதுகாப்பை காவு வாங்கியுள்ளது.
இந்த லட்சணத்தில், ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என, மேடையில் நாடகமாடுவது, இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் என சட்டசபையில் மார்தட்டுவது போன்ற பசப்பு வேலைகளில் ஈடுபட, வெட்கமாக இல்லையா?
தமிழக பெண்களின் பாதுகாப்பு குறித்து கடுகளவும், அக்கறையின்றி திசை திருப்புவதில் மட்டுமே குறியாக இருக்கும் தி.மு.க.,வினரின் போலி முகத்திரை, வரும் தேர்தலில் கிழித்தெறியப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
