Kerala: குறைந்த விலையில் லேப்டாப் வழங்குவதாக மோசடி? நடிகர் ஜெயசூர்யா சொத்து முடக்கம்; நடந்தது என்ன?

மோசடி பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவி சரிதாவின் வங்கிக் கணக்கில் சென்றதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

நடிகர் ஜெயசூர்யா

கேரள மாநிலம் திருச்சூரில் 2019-ம் ஆண்டு சேவ் பாக்ஸ் கான்ஸ்செப்ட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடங்கப்பட்டது. ஸ்வாதிக் ரஹீம் என்பவர் அந்த நிறுவனத்தை நடத்திவந்தார்.

சேவ் பாக்ஸ் நிறுவனத்துக்கு பணம் செலுத்தினால் லேப்டாப், மொபைல் போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் வாங்கலாம் என அந்த நிறுவனம் கேரளா முழுவதும் விளம்பரம் செய்திருந்தது.

அதற்காக அந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் பணம் செலுத்தும் வசதியையும் ஏற்படுத்தியிருந்தது. மேலும், ஆன்லைன் ஏலம் மூலம் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைக் குறைந்த விலையில் வாங்குவதற்கு சேவ் பாக்ஸ் நிறுவனத்தின் காயின்ஸ்களை பணம் செலுத்தி வாங்க வேண்டும் என அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.

குறைந்த விலையில் பொருட்கள் வாங்கும் ஆசையில் சேவ் பாக்ஸ் ஆப் மூலம் பலரும் பணம் செலுத்தி காயின்ஸ்கள் வாங்கியிருந்தனர். ஆனால், அந்த நிறுவனம் தெரிவித்தபடி பொருட்களை வழங்காமல் மோசடி செய்தது. அந்த நிறுவனம் மீது பலரும் புகார் அளித்தனர்.

ஆன்லைன் லேப்டாப் ஆர்டர்
ஆன்லைன் லேப்டாப் ஆர்டர்
மாதிரி படம்

சேவ் பாக்ஸ் நிறுவன மோசடி குறித்து வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சூர் கிழக்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 2023-ம் ஆண்டு ஸ்வாதி ரஹீம் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்வாதி ரஹீமுக்கு நடிகைகள் உள்ளிட்டவர்களுடன் தொடர்பு இருந்ததும், பணத்தை ஆடம்பரமாகச் செலவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த மோசடியில் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட விசாரணைக்காக அமலாக்கத் துறையும் வழக்கை கையில் எடுத்து களத்தில் இறங்கியது.

சேவ் பாக்ஸ் ஆப் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்த நடிகர் ஜெயசூர்யா மீது அமலாக்கத்துறையின் பார்வை விழுந்தது. நடிகர் ஜெயசூர்யாவிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை. அந்த நிறுவனத்தின் மோசடியில் தனக்கு பங்கு இல்லை எனவும், விளம்பரத்தில் நடிப்பதற்காக சம்பளம் வாங்கியதாகவும் ஜெயசூர்யா தெரிவித்திருந்தார்.

நடிகர் ஜெயசூர்யா
நடிகர் ஜெயசூர்யா

அதே சமயம் மோசடி பணத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் நடிகர் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவி சரிதாவின் வங்கிக் கணக்கில் சென்றதாக அமலாக்கத்துறை கண்டுபிடித்தது.

ஜெயசூர்யாவுக்கு மோசடியில் பங்கு இல்லை என்றாலும், அந்த நிறுவனம் மோசடி மூலம் சம்பாதித்த தொகையில் இருந்து பணம் பெற்றதாக அவர்மீது குற்றச்சாட்டு உள்ளது.

இதற்கிடையே நடிகர் ஜெயசூர்யாவின் 39.1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை அமலாக்கத்துறை கண்டுபிடித்து முடக்கி உள்ளது.

“நான் சினிமா மூலம் பணம் ஈட்டி அதில் முறையாக வரி செலுத்திவரும் குடிமகன்’ என நடிகர் ஜெயசூர்யா கருத்து தெரிவித்துள்ளார்.

Source link