சென்னை: வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்துள்ளதாக, இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை திருமங்கலம், வெல்கம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ லட்சுமி. இவர், எழும்பூரில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இதற்கு முன், மது விலக்கு அமலாக்கப்பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு என, முக்கிய பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.
இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கள் சென்றன.
அவற்றின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜலட்சுமி வீட்டில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அவரின் சொத்து மதிப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது, 2017 ஜூன் 1ல் இருந்து, 2025 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில், ராஜலட்சுமி வருமானத்திற்கு அதிகமாக 5.42 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்திருப்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, ராஜலட்சுமி மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
