துரைமுருகன் இருக்கையில் அமர்ந்த அன்பில் மகேஷ்..! சட்டசபையில் பரபரப்பு

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 17-ந் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 2 நாட்கள் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இன்றைய கூட்டத்தில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் பதில் உரை இடம்பெற்றது.

அதன்பிறகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். ஏற்கனவே, உடல்நலக் குறைவால் அவை முன்னவரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் ஓய்வு எடுத்துவரும் நிலையில், அவர் அவைக்கு வரவில்லை.

இந்த நிலையில், காலியாக இருந்த துரைமுருகன் இருக்கையில் இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் வந்து அமர்ந்தார். அவருக்கு அடுத்ததாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவும் உட்கார்ந்து இருந்தனர்.

பொதுவாக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து, அமைச்சர்கள் வரிசையில் மூத்த அமைச்சர்கள் முதலில் இருப்பார்கள். ஆனால், பின் வரிசையில் உள்ள அமைச்சர் ஒருவர் முன்வரிசையில் வந்து அமர்ந்தது சட்டசபையில் பரபரப்பாக பேசப்பட்டது.

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், அமைச்சர் அன்பில் மகேஷூம் பள்ளி கால நண்பர்கள். அதனால், அடிக்கடி உதயநிதி அருகே வந்து அன்பில் மகேஷ் அமர்வார். எனவே, அதுபோலத்தான் இன்றைக்கும் உதயநிதி அருகே காலியாக இருந்த அமைச்சர் துரைமுருகன் இருக்கையில் வந்து அவர் அமர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Source link