மேகதாது விவகாரம்: கர்நாடக முதல்வர் அழைப்பை விஜய் நிராகரிக்க வேண்டும்

கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மேகதாது குறித்து தமிழகம் முதல்வரிடம் பேச அழைப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என விவசாயிகள் சங்க தலைவர் பிஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.ஆர் பாண்டியன் வேதாரண்யத்தில் மணக்காடு, தாணிக்கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் குறுவை நேரடி விதைப்பு செய்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்ததாவது:

காவிரி டெல்டாவில் எல் நினோ தாக்குதலால் குறுவை சாகுபடியை இழந்து விட்டோம். சம்பாவும் கேள்விக்குறியாகி உள்ளது. வேதாரண்யம் தாலுகா உட்பட நாகை மாவட்டம் முழுவதும் குறுவை நேரடி விதைப்பு செய்து பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் வறட்சியால் குறுவை பாதிப்பை மாவட்ட அரசிதழில் வெளியிட்டு காப்பீடு நிறுவனம் மூலம் 100%ம் இழப்பீடு பெற்று தர வேண்டுகிறேன்.

கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு முரணாகவும் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மாநில முதலமைச்சர் டி.கே சிவக்குமார் மேகதாது அணை கட்ட சட்ட விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணாக அழைப்பு விடுவதை முதலமைச்சர் ஜோசப் விஜய் நிராகரிக்க வேண்டும்.

கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் கண்டுகொள்ளவில்லை. 2007-ல் வெளியிடப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பையும் அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மறுத்து விட்டது. 

இந்நிலையில் 2013ல் தமிழகத்தில்  ஏற்பட்ட வறட்சிக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட மறுத்தது. பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து வாய் திறக்க மறுத்தார். காவிரியில் தண்ணீர் திறக்க மறுப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார். வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தமிழக முதலமைச்சரும் கர்நாடக முதலமைச்சரும் நேரில் சந்தித்து பேசி தீர்த்துக் கொள்ளலாமே என கேள்வியை முன்வைத்தனர். அப்போது தமிழக முதலமைச்சர் சார்பில் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கர்நாடகம் ஏற்க மறுக்கிறபோது நீதிமன்றம் தலையிட்டு எங்களுக்கு தண்ணீரை பெற்று தர வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரோடு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பெங்களூரில் அமர்ந்து பேச உச்ச நீதிமன்றமே ஏற்பாடு செய்யும் அக்கூட்டத்தில் இரு மாநில முதலமைச்சர்களும் பங்கேற்க வேண்டுமென உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற உத்திரவை ஏற்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஜெயலலிதா பெங்களூர் சென்று அம்மாநில முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டரோடு பேச்சு வார்த்தையை நடத்தினார். அப்போது தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதாகவும் கர்நாடகாவில் உள்ள தண்ணீரை திறந்து விட வலியுறுத்தினார். அப்போது பதிலளித்த கர்நாடக முதலமைச்சர் ஜெகதீஷ் ஷட்டர் தண்ணீரை திறக்க இயலாது என்பதை ஒரே வரியில் பதில் அளித்தார். இதனை அடுத்து அவர்கள் கொடுத்த குடிநீரை கூட அருந்தாமல் உடனடியாக புறப்பட்டு ஜெயலலிதா தமிழகம் வந்தடைந்தார்.

பிறகு பேச்சுவார்த்தை குறித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்தது. அதனை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் இனி காவிரி குறித்து எந்த ஒரு பேச்சுவார்த்தையிலும் கர்நாடகம் தமிழகம் தனிப்பட்ட முறையில் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டது. மேலும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கர்நாடகத்துக்கு மட்டுமா பிரதமராக மன்மோகன் சிங் உள்ளார். தமிழ் நாட்டிற்கும் அவர்தான் பிரதமர் என்பதை உணர வேண்டும். தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தூங்குகிறாரா? என்ற கேள்வியை முன்வைத்து கண்டனத்தையும் பதிவு செய்தது. கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பிரதமர் மன்மோகன் சிங் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. 

இதனை ஏற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவின் பேரில் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்டுவதற்கு தடையின்மை சான்று வழங்க மறுத்துவிட்டது. மத்திய நீர் வள ஆணையமும் அடர்ந்த வனப்பகுதியில் அணைக்கட்ட இயலாது என்பதை உணர்ந்துள்ளது. மேலும் தமிழகம் அனுமதி இல்லாமல் கர்நாடகா அணைக்கட்ட வரைவு திட்ட அறிக்கை கூட செல்லுபடி ஆகாது.

இந்தநிலையில், தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய உபரி நீரையும் தடுத்து தமிழக எல்லை அருகே மேகதாதுவில் சட்டவிரோதமாக அணைக் கட்ட எடுக்கும் முயற்சியை அரசியல் கண்ணோட்டத்தோடு நியாயப்படுத்தும் விதமாக நயவஞ்சக நடவடிக்கையாக டி.கே சிவகுமார் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை ஆகஸ்ட் 3ல் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். 2013 உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவிரி மேகதாது அணை கட்ட விவாதிக்க அழைப்பு கொடுக்கும் கர்நாடக முதலமைச்சர் டி.கே சிவக்குமாரின் அழைப்பை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நிராகரிக்க வேண்டும்.

காவிரி நீரை பகிர்ந்தளிப்பதாக இருந்தாலும், அணைக் கட்டுமானத்தை தடுத்து நிறுத்துவதாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மட்டுமே முடிவெடுக்க முடியும். ஆணையத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு மாநிலமும் காவிரி நீரை பகிர்ந்தளிக்க முடியாது, மேலும் அணை கட்டுமானம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த இயலாது என்பதை உணர வேண்டும்.

ஆணையம் தனது கட்டுப்பாட்டிற்குள் கர்நாடகம் மற்றும் தமிழகத்தில் இருக்கக்கூடிய அணைகளின் நீர் நிர்வாக முறைகளை கொண்டு வர வேண்டும். ஆணையம் மறுக்கும் பட்சத்தில் ஆணையத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு பி.ஆர் பாண்டியன் கூறினார்

இந்தச் சந்திப்பின்போது மாநில அமைப்பு செயலாளர் எஸ். லூதர், நாகை மாவட்ட செயலாளர் ஆர் எஸ்.கருணை நாதன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன் மாவட்ட துணை செயலாளர் எஸ்.ரவி வேதாரண்யம் ஒன்றிய தலைவர் ஜி.மணிமாறன். செயலாளர் சிவசங்கரன் பொருளாளர் அன்பழக பாண்டியன் துணை செயலாளர் இராமலிங்கம், வைரப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

க.சண்முகவடிவேல்

Source link