மிலன்: இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. பெண்களுக்கான ‘ஆல்பைன்’ பனிச்சறுக்கு, ‘ஸ்லாலோம்’ பிரிவு பைனலில், இலக்கை ஒரு நிமிடம், 39.10 வினாடியில் கடந்த அமெரிக்காவின் மிகேலா ஷிப்ரின் 30, தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். குளிர்கால ஒலிம்பிக் ‘ஆல்பைன்’ பனிச்சறுக்கில் மூன்று தங்கம் கைப்பற்றிய முதல் அமெரிக்க நட்சத்திரமானார். ஏற்கனவே இவர், 2014 (‘ஸ்லாலோம்’), 2018ல் (ஜெயண்ட் ஸ்லாலோம்) தலா ஒரு தங்கம் வென்றிருந்தார். தவிர இது, குளிர்கால ஒலிம்பிக்கில் இவரது 4வது பதக்கம். 2018ல் அணிகள் பிரிவில் வெள்ளி வென்றிருந்தார்.
பிற சர்வதேச செய்திகள்
காலிறுதியில் ரியல் மாட்ரிட்
மாட்ரிட்: ஸ்பெயினின் மாட்ரி நகரில் நடந்த பெண்களுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து ‘பிளே-ஆப்’ சுற்று போட்டியில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), பாரிஸ் எப்.சி., (பிரான்ஸ்) அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் அணி 5-2 (3-2, 2-0) என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு போட்டியில் ஆர்சனல் அணி (இங்கிலாந்து) 7-1 (4-0, 3-1) என லியூவன் அணியை (பெல்ஜியம்) வென்றது. காலிறுதியில் ரியல் மாட்ரிட் – பார்சிலோனா, ஆர்சனல் – செல்சி அணிகள் மோதுகின்றன.
எக்ஸ்டிராஸ்
* டில்லி ஓபன் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல் 4-6, 4-6 என, இத்தாலியின் பெடரிகோ சினாவிடம் தோல்வியடைந்தார்.
* பெங்களூருவில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 2-6, 6-4, 7-6 என, ஜப்பானின் ஹோண்டாமாவை வீழ்த்தினார்.
