230 சட்ட மசோதாக்கள் ஐந்து ஆண்டுகளில் தாக்கல்: சபாநாயகர் அப்பாவு தகவல்

சென்னை: ”தமிழக 16வது சட்டசபை கூட்டம், கடந்த ஐந்து ஆண்டுகளில், 161 நாட்கள் நடந்துள்ளது. இதில், 18 எம்.எல்.ஏ.,க்கள் அனைத்து நாட்களிலும் பங்கேற்றுள்ளனர்,” என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சட்டசபையின் ஐந்தாண்டு கால செயல்பாடுகள் குறித்து, சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:

தமிழகத்தில், 16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர், 2021ம் ஆண்டு ஜூன் 21ல் துவங்கியது. அன்று முதல், மொத்தம் 161 நாட்கள் கூட்டம் நடந்துள்ளது. மாலையில் 17 நாட்கள் சபை கூடியது.

3,665 துணை கேள்வி

மொத்தமாக 770 மணி நேரம், 23 நிமிடங்கள் சபை நடந்துள்ளது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானங்களின் விவாதமும், பதிலும், 20 நாட்கள் நடந்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின், தனது துறை தொடர்பாக, 3:54 மணி நேரம் பதில் அளித்துள்ளார். மற்ற துறை விவாதங்களில் 1:08 மணி நேரம் முதல்வர் பேசியுள்ளார். அமைச்சர்கள் 105:35 மணி நேரம் பேசியுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளில், பா.ம.க., வைச் சேர்ந்த ஜி.கே.மணி, அருள்; தி.மு.க.,வைச் சேர்ந்த தாயகம் கவி, பிரபாகரராஜா, அரவிந்த் ரமேஷ் ஆகியோர் அதிக கேள்விகள் கேட்டுள்ளனர். மொத்தமாக 1,008 கேள்விகளுக்கும், 3,665 துணை கேள்விகளுக்கும், அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். அதிக கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர்களில், சேகர்பாபு, நேரு, வேலு, சுப்பிரமணியன், துரைமுருகன் ஆகியோர், முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர்.

சபையில் மூன்று உரிமை மீறல் பிரச்னைகள் எழுப்பப்பட்டன. அவற்றில் இரண்டு உரிமை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட மசோதாக்கள் 230 தாக்கல் செய்யப்பட்டன.

கவர்னர், 14 சட்ட மசோதாக்களை திருப்பி அனுப்பினார்.

36 அறிவிப்பு

நான்கு சட்ட மசோதாக்களை, அரசு திரும்ப பெற்றுக் கொண்டது. சபையில், 110 விதியின் கீழ், முதல்வர் 36 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஐந்து ஆண்டுகளில், கூட்டம் நடந்த அனைத்து நாட்களும், எம்.எல்.ஏ.,க்கள் அமலு, அரவிந்த் ரமேஷ், ராஜேந்திரன், இளங்கோ, ஈஸ்வரன், உதயசூரியன், எபினேசர், கருணாநிதி, சுதர்சனம், சுந்தர் உள்ளிட்ட 18 பேர் வந்திருந்தனர். பார்வையாளர் மாடத்தில், 70,959 பேர் அனுமதிக்கப்பட்டு சபை நிகழ்ச்சிகளை கவனித்துள்ளனர்.

இவ்வாறு சபாநாயகர் கூறினார்.

Source link