அமைச்சர் நேரு கட்டுப்பாட்டில் உள்ள, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக, டி.ஜி.பி.,க்கு அமலாக்கத்துறை, ஆவணங்கள் உள்ளடக்கிய, 232 பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பியது. இந்த கடிதம் சார்ந்த விபரங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை சார்பில், ‘சீலிடப்பட்ட கவரில்’ அளிக்கப்பட்டன.
அமலாக்கத்துறை அளித்த ஆவணங்களில், ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இரண்டு தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள், ஒரு எம்.பி.,, ஆகியோர் இடையே நடந்த, ‘வாட்ஸ் ஆப்’ உரையாடல்கள், ‘டெண்டர் ஆவணங்கள் பரிமாற்றம்’ மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டோர் முகவரி, புகைப்படம் போன்றவற்றை அனுப்பியது உள்ளிட்ட விபரங்கள், ஆதாரத்துடன் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு நபரும், எவ்வளவு பணம் கொடுத்துள்ளனர் என்ற விபரம் தொடர்பாக, அதிகாரிகள் மட்டத்தில் நடந்த உரையாடல்களும் இடம் பெற்றுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விரிவான விசாரணையை துவக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவால், முறைகேடில் தொடர்புடைய அதிகாரிகள் பலருக்கு சிக்கல் உருவாகி உள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் அரசியலில் சூறாவளியை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை வாங்குவது தொடர்பாக, ஆளும் கட்சி தரப்பில் ஆலோசனை நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
– நமது சிறப்பு நிருபர் –
