ஏ.ஐ.எப்., எனும் ‘ஆல்ட்டர்நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் பண்டுகளில்; முதலீடு செய்துள்ளவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்யும் வகையில், செபி புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது.
இதன்படி, இனி ஏ.ஐ.எப்., பண்டு நிறுவனங்கள், தங்கள் திட்டங்களின் என்.ஏ.வி., விபரங்களை, ‘ஐ.எஸ்.ஐ.என்.,’ என்று சொல்லப்படுகிற ‘சர்வதேச பத்திர அடையாள எண்’ அடிப்படையில் டெபாசிட்டரிகளில் கட்டாயம் பதிவேற்ற வேண்டும்.
‘சர்வதேச பத்திர அடையாள எண்’ என்பது பங்குகள், பத்திரங்கள் மற்றும் பிற நிதித் திட்டங்களை உலகளவில் தனித்துவமாக அடையாளம் காணப் பயன்படும் 12 இலக்க குறியீடாகும். மேலும், இந்த புதிய விதிமுறைகளின்படி, ஒவ்வொரு திட்டத்தின் என்.ஏ.வி., விபரங்களையும், 30 நாட்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், ‘ஒருங்கிணைந்த கணக்கு அறிக்கைகள் (சி.எஸ்.ஏ.,)’ தாமதமானாலும், முதலீட்டாளர்கள் செபியின் டெபாசிட்டரி தளம் வழியாக, தங்கள் முதலீட்டின் தற்போதைய மதிப்பை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.
சந்தை நிபுணர்களின் கருத்து:
* முதலீட்டாளர்கள் தங்கள் பணம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இனி மிகத் துல்லியமாகவும், விரைவாகவும் தெரிந்து கொள்ளலாம்
* அதிகபட்சம் 30 நாட்கள் இடைவெளியில் தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்பதால், இது முதலீட்டுச் சூழலில் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்
* வேகமான அறிக்கை தாக்கல் என்பது தகவல்களின் நம்பகத்தன்மையை உயர்த்துமே தவிர, இந்தத் திட்டங்களில் உள்ள அடிப்படை முதலீட்டு அபாயங்களை மாற்றாது
* முதலீட்டாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் முதலீட்டுத் திட்டங்களின் செயல்பாடுகளை நெருக்கமாக கண்காணிக்க முடியும் என்பதால், முறைகேடுகள் தவிர்க்கப்படும்
* முதலீட்டிலிருந்து பாதியளவு அல்லது முழுமையாக பணமாக மாற்றும்போது, நிதி மேலாளர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் இடையே ஏற்படும் தேவையற்ற தகவல் பரிமாற்ற குளறுபடிகள் பெருமளவு குறையும்
* ஒரே இடத்தில் அதிகாரப்பூர்வ தகவல்கள் கிடைப்பதால், குளறுபடிகள் ஆரம்பத்திலேயே கண்டறியப்படும்
* இந்த கூடுதல் விதிமுறைகளால், நிதி நிறுவனங்களுக்கு சிறிய அளவில் நிர்வாகச் செலவுகள் அதிகரித்தாலும், அது ஒட்டுமொத்த முதலீட்டுச் சூழலை பாதிக்காது
மாறாக, செபியின் இந்த நடவடிக்கை மூலம் நிறுவன முதலீட்டாளர்களின் பங்கேற்பு அதிகரித்து, இத்துறை மேலும் வளர்ச்சி அடையும்.
