"பேஸ்புக் காதலனோடு வாழ விரும்புகிறேன்" – சேர்த்து வைத்த கணவன்; உத்தரப்பிரதேசத்தில் நடந்த சுவாரஸ்யம்!

பேஸ்புக் காதலனைத் தேடி மூன்று முறை போன மனைவியை காதலனிடமே கணவன் ஒப்படைத்துள்ளார்.

ஹரீஷ், சோனி(இடமிருந்து)

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் பகுதியைச் சேர்ந்த பீரு என்பவர் முஜாபர் நகரைச் சேர்ந்த சோனி (23) என்ற பெண்ணைக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

வீட்டில் குழந்தைகளைக் கவனித்துக்கொண்டிருந்த சோனி அடிக்கடி பேஸ்புக்கில் மூழ்கி இருந்தார். இதில் அவருக்கு ஹரீஷ் (21) என்ற வாலிபரின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் காதலனைத் தேடி சோனி அடிக்கடி காதலன் இருக்கும் இடத்திற்கே செல்ல ஆரம்பித்தார்.

அப்படி மூன்று முறை தனது கணவன் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு காதலனைத் தேடிப் போனார். ஒவ்வொரு முறையும் காதலன் பேசி திரும்ப அனுப்பி வைத்தார். ஆனால் நான்காவது முறை மீண்டும் சோனி, காதலனைத் தேடி ஓடிப்போனார். இம்முறைதான் கணவன் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று சோனி பிடிவாதமாகத் தெரிவித்துவிட்டார். இதனால் இப்பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றது.

திருமணம்
திருமணம்

இது குறித்து சோனி மற்றும் அவரது கணவன் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் 4 மணி நேரம் வாக்குவாதம் செய்தனர். குழந்தைகள் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கும்படி குடும்பத்தினர் சோனியிடம் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், சோனி தான் காதலனுடன் மட்டுமே வாழ்வேன் என்றும், கணவன் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்றும் பிடிவாதமாகக் கூறினார். இதையடுத்து, “அவர் விருப்பப்படியே அவரது காதலனுடன் வாழட்டும்” என்று பீரு தெரிவித்து விட்டார்.

இது குறித்து பீரு கூறுகையில், “‘என்னுடன் இருப்பது அவருக்கு மகிழ்ச்சியளிக்கவில்லையெனில், அவர் விரும்பும் நபருடன் வாழட்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து இருவரிடமும் போலீஸார் வாக்குமூலம் வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர். அன்று மாலையே சோனி அங்குள்ள கோயில் ஒன்றில் தனது பேஸ்புக் காதலனைத் திருமணம் செய்து கொண்டார். சோனியின் கணவன் தனது குழந்தைகளை வளர்த்துக்கொள்வதாகத் தெரிவித்துவிட்டார்.

Source link