தீபத்துாணில் தீபம் ஏற்றாமல் நீதிமன்றத்தை அவமதித்த வழக்கு: அமைச்சர் ரகுபதிக்கு எதிராக மனு

மதுரை: திருப்பரங்குன்றம் மலை தீபத்துாண் விவகார நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அமைச்சர் ரகுபதிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், ராம ரவிக்குமார், பரமசிவம் உள்ளிட்ட சிலர் மனு தாக்கல் செய்ததன் அடிப்படையில், திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில், 2025 டிச., 3ல் கார்த்திகை தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் டிச., 1ல் உத்தரவிட்டார்.

இதை நிறைவேற்றாததால் கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

பிப்., 2ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். கலெக்டர் உள்ளிட்ட மூன்று அதிகாரிகளும் ஆஜராகி, ‘நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததற்கு நிபந்தனையற்ற வகையில் வருத்தம் தெரிவிக்கிறோம்’ என்றனர். நீதிபதி மார்ச் 2க்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

பரமசிவம் தாக்கல் செய்த இடையீட்டு மனு:

தமிழக அமைச்சர் ரகுபதி, ஜன., 6ல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘உயர் நீதிமன்ற உத்தரவுப்படி துாணில் தீபம் ஏற்றுவதை தடுக்கவே தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்படி செய்திருக்காவிடில் அங்கு தீபம் ஏற்றியிருப்பர். அப்படி நடந்திருந்தால் தீபம் ஏற்றுவது வழக்கமாகிவிடும்’ என, தெரிவித்தார். இதில் உள்நோக்கம் உள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின்படி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இவ்வழக்கில் மற்றொரு எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Source link