இந்தியாவில் 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவு; குஜராத்தில் 68 லட்சம் ஓட்டுகள் நீக்கம்

புதுடில்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 6 மாநிலங்களில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நிறைவடைந்தன. இதில், அதிகபட்சமாக குஜராத்தில் மட்டும் 68 லட்சம் ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

தமிழகம், கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்பட 12 மாநிலங்களில் முதற்கட்டமாக வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் முதல் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன.

இறந்தவர்கள், நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், ஒரே நபர் பல இடங்களில் பதிவு செய்திருப்பது உள்ளிட்ட காரணங்களால் ஓட்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், கேரளா, கோவா ஆகிய 6 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் நிறைவடைந்து விட்டன. இந்த மாநிலங்களின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் மட்டும் 68 லட்சத்து 12 ஆயிரத்து 711 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், வாக்காளர் பட்டியலில் 5 கோடியே 8 லட்சத்து 43 ஆயிரத்து 436 ஓட்டுகள், 4 கோடியே 40 லட்சத்து 30 ஆயிரத்து 725ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து, மத்தியபிரதேசத்தில் 34 லட்சத்து 25 ஆயிரத்து 78 ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானில் 31 லட்சம் ஓட்டுகளும், சத்தீஸ்கரில் 25 லட்சம் ஓட்டுகளும், கேரளாவில் சுமார் 9 லட்சம் ஓட்டுகளும், கோவாவில் 1.25 லட்சம் ஓட்டுகளும் நீக்கப்பட்டுள்ளன. யூனியன் பிரதேசங்களைப் பொறுத்தவரையில் அந்தமான் நிகோபார் தீவுகளில் 52,364 ஓட்டுகளும், புதுச்சேரியில் 77,367 ஓட்டுகளும், லட்சத்தீவில் 206 ஓட்டுகளும் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 12 மாநிலங்களில் எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 9 மாநிலங்களின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. அடுத்ததாக, தமிழகம், மேற்கு வங்கம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான வாக்காளர் பட்டியலை இந்த மாத இறுதிக்குள் தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் எப்போது வேண்டுமானாலும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source link