மிலன்: குளிர்கால ஒலிம்பிக்கில் அசத்திய நார்வே ‘கிராஸ் கன்ட்ரி’ பனிச்சறுக்கு வீரர் ஜோஹன்னஸ் ஹோஸ்புளோட் கிளேபோ 6 தங்கம் வென்று சாதனை படைத்தார்.
இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான ‘கிராஸ் கன்ட்ரி’ பனிச்சறுக்கு, 50 கி.மீ., கிளாசிக்கல் பிரிவில் நார்வேயின் ஜோஹன்னஸ் ஹோஸ்புளோட் கிளேபோ 29, தங்கம் வென்றார். இது, இம்முறை இவர் கைப்பற்றிய 6வது தங்கம். ஏற்கனவே 10 கி.மீ., ‘பிரீஸ்டைல்’, 20 கி.மீ., ‘ஸ்கையத்லான்’, தனிநபர் ‘ஸ்பிரின்ட்’, 4X7.5 கி.மீ., ‘ரிலே’, அணிகளுக்கான ‘ஸ்பிரின்ட்’ போட்டிகளில் தங்கம் வென்றிருந்தார். இதன்மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில், ஒரு சீசனில் அதிக தங்கம் கைப்பற்றிய வீரரானார். இதற்கு முன், 1980ல் நியூயார்க்கில் நடந்த போட்டியில் அமெரிக்க ‘ஸ்பீடு ஸ்கேட்டர்’ எரிக் ஹெய்டென் 5 தங்கம் வென்றிருந்தார்.
தவிர, குளிர்கால ஒலிம்பிக்கில் 13வது பதக்கத்தை கைப்பற்றினார் கிளேபோ. இதுவரை 11 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளார். குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக தங்கம் கைப்பற்றியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ள இவர், ஒட்டுமொத்த ஒலிம்பிக் அரங்கில் அதிக தங்கம் வென்றவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் (23 தங்கம்) நீடிக்கிறார்.
