என் இளம் வயதில், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லுாரியில் மாணவனாக இருந்த நாட்களில், அந்த மகானுக்கு சிலை நிறுவுவதில் எனக்கும் ஒரு பங்கு அமையும் என நான் கற்பனை கூட செய்ததில்லை. ஆனால், இன்று அப்படி ஒரு பாக்கியம் அமைந்திருக்கிறது.
வ.உ.சி ., என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு, மதுரையில், 140 அடி உயர பிரமாண்ட சிலை அமையவுள்ளது. அதற்கு அடிக்கல் நாட்டும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த மகத்தான வேளையில், அவரை பற்றிய சில சிந்தனைகள் என் மனதில் எழுகின்றன. அவற்றை இளைஞர்களுடன் பகிர விரும்புகிறேன்.
தமிழகத்தில் எத்தனையோ சுதந்திர போராட்ட தியாகிகள் இருந்தனர். அனைவரும் போற்றத்தக்கவர்கள். ஆனால், சுதந்திர போராட்டத்தை தனியொரு அணுகுமுறையில், வ.உ.சி., முன்னெடுத்துச் சென்றார். ஆங்கிலேயரை எதிர்க்க, அப்படியும் ஒரு வழி இருக்கிறது என்பதை காட்டியவர் அவர்.
ஆங்கிலேயர், முதலில் வணிகத்திற்காக தான் நம் நாட்டிற்கு வந்தனர். எனவே, அவர்களின் நோக்கம் லாபம் தான். அந்த லாபத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே, வ.உ.சி.,யின் அணுகுமுறையாக இருந்தது.
அதனாலேயே, ஆங்கிலேயர்களின் கப்பல் சேவை ஏகாதிபத்தியத்திற்கு போட்டியாக, கப்பல் சேவை நிறுவனத்தை, வள்ளல் பாண்டித்துரை தேவரின் உதவியோடு வ.உ.சி., துவங்கினார். அந்த கப்பல் நிறுவனத்திற்கு, ‘சுதேசிய நாவாய் சங்கம்’ என்று பெயரிட்டார்.
கப்பல் வணிகம் ஆங்கிலேயர் எதிர்ப்பு ஒரு புறம் இருக்க, நம் தேசிய சுயமரியாதையின் அடையாளமாக, கப்பல் வணிகத்தை சிதம்பரம் பிள்ளை கருதினார்.
கப்பல் சேவை நிறுவனம் மட்டுமல்ல, ‘தர்ம சங்க நெசவு சாலை, துாத்துக்குடி கைத்தொழில் சங்கம், சுதேசிய பண்டக சாலை, வேளாண் சங்கம்’ என, சுதேசி சுயசார்பு சிந்தனையை ஒத்து, ஆளுமைமிக்க மனிதரான அவர், பல நிறுவனங்களை துவங்கினார்.
வ.உ.சி.,யின் சுதேசி சிந்தனை தான், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 2047ம் ஆண்டில் வலிமையான பாரதத்தை உருவாக்க, ‘தற்சார்பு இந்தியா’ என்ற நோக்கத்தை முன்னிறுத்துவதற்கு அடித்தளமாக அமைந்தது.
வ.உ.சி.,யின் 150வது பிறந்த நாளில், அவரது தொலைநோக்கு பார்வையை நினைவுகூர்ந்த பிரதமர், ‘துறைமுகம், கப்பல் துறைகளில் சிதம்பரம் பிள்ளை தற்சார்பு இந்தியாவைத் திட்டமிட்டதைக் கண்டு எழுச்சியடைகிறோம்’ என குறிப்பிட்டதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்.
சுதேசி கப்பல் நிறுவனத்தை உருவாக்க, வ.உ.சி., மேற்கொண்ட முயற்சிகள் கடலினும் பெரிது என்றால், அதை முடிவுக்குக் கொண்டு வர ஆங்கிலேயருக்கு அதைவிட அதிக முயற்சி தேவைப்பட்டது. தங்கள் கப்பல் நிறுவனங்களில் தள்ளுபடி, இலவசம் என சலுகைகளை அறிவித்தனர். அது எடுபடாத போது, சிதம்பரம் பிள்ளைக்கு கையூட்டு தர முயன்றனர்.
அதுவும் எடுபடாத போது, அவரை கைது செய்து, 40 ஆண்டுகால தீவாந்திர சிறை தண்டனை அறிவித்தனர். 36 வயதே நிரம்பிய ஓர் இளைஞருக்கு, 40 ஆண்டு காலம் தீவாந்திர தண்டனை என்பது, எந்த சுதந்திர போராட்ட வீரருக்கும் வழங்கப்படாத தண்டனை. இவையெல்லாம் வ.உ.சி.,யிடம் ஆங்கில அரசு கொண்டிருந்த பயத்தின் வெளிப்பாடு.
கோவை, கண்ணனுார் சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறையில் செக்கிழுக்க வைப்பது போன்ற மனித தன்மையற்ற செயல்களை மேற்கொண்டு கொடுமைகள் செய்ததெல்லாம், அவரால் ஓர் அரசாங்கமே ஆட்டம் கண்டது என்பதற்கான வரலாற்றுப் பதிவு.
ஒருவரை சிறையில் அடைத்து செயல்பாட்டை முடக்கினால் மட்டுமே தங்களால் ஆட்சி செய்ய முடியும் என்று ஆங்கிலேயர் நம்பினர் என்றால், அந்த இளைஞருடைய மனதின் ஆழத்தையும் செயல் திறனையும் வியக்காமல் இருக்க முடியுமா?
இப்படிப்பட்ட இளைஞர்களே இன்றைய பாரதத்திற்கும் தேவைப்படுகின்றனர். வளர்ந்த பாரதத்தை நோக்கிய நம் பயணம் வெற்றி அடைய, தொழில் முனைவதற்கு மன வலிமையுடைய லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவைப்படுகின்றனர்.
சுதேசி நோக்கம் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சவாலான சூழலில் சவாலான தொழிலை துவங்குவதற்கான தைரியம் வேண்டும் என்பது, சிதம்பரம் பிள்ளை அவர்களின் வாழ்கையில் இருந்து இன்றைய தலைமுறை எடுத்துக்கொள்ள வேண்டிய பாடம்.
வ.உ.சி.,யின் மன வலிமையும், தொழில் முனைவு ஆர்வமும், சுதேசி நோக்கமும் இன்றைய தலைமுறைக்கும் வரும் தலைமுறைகளுக்கும் என்றும் நினைவில் நின்று, பலம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த மாமனிதரின் கம்பீரமான பிரமாண்ட சிலை, மதுரையில் நிறுவப்பட உள்ளது.
வ.உ.சி.,யின் தியாகமும் தவ வாழ்வும் கற்பனைக்கு அப்பாற்பட்ட நிஜம். நம் நாட்டவரின் சுயமரியாதைக்காக, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த அவருக்கு, தமிழ்கூறும் நல்லுலகம் என்றும் கடன்பட்டு இருக்கும்.
சி.பி.ராதாகிருஷ்ணன்
பாரத துணை ஜனாதிபதி
