தேர்தலுக்காக 'டாஸ்மாக்' கடைகளில் முன்கூட்டியே மதுபானங்கள் பதுக்கல்

சென்னை: சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், ‘டாஸ்மாக்’ கடைகளில் மது விற்பனையை தேர்தல் கமிஷன் கண்காணிக்கும். அப்போது, மது வகைகளை அதிகம் வாங்கி சிக்கி கொள்ளக் கூடாது என்பதற்காக, தற்போதே, அரசியல் கட்சியினர், மதுபானங்களை வாங்கி பதுக்கி வருகின்றனர்.

இதனால் மது விற்பனை, 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. அவற்றில் தினசரி விற்பனை, சராசரியாக 150 கோடி ரூபாயாகவும், விடுமுறை நாட்களில், அதை விட அதிகமாகவும் உள்ளன.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு, கட்சியினர், ‘குவார்ட்டர்’ மது பாட்டில், பிரியாணி, ‘பேட்டா’ எனப்படும் தினசரிப்படியான ரொக்கம் வழங்குவது வழக்கம்.

சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரலில் நடக்க உள்ளது. தேர்தல் தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். அன்று முதல் தினசரி மதுக் கடைகளில் நடக்கும் விற்பனையை, தேர்தல் ஆணையம் கண்காணிக்கும்.

மொத்தமாக, மது பாட்டில்களை வாங்கி எடுத்து சென்றால், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்வர்.

எனவே, இந்த பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, கட்சியினர் தற்போது, மது வகைகளை அதிகளவில் வாங்கி, பதுக்கி வருகின்றனர்.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி கூறியதாவது:

மது விற்பனை முழுதும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு கடையிலும், தினமும் எவ்வளவு மதிப்பிற்கு மது வகைகள் விற்பனையாகின்றன, இருப்பில் உள்ள மது வகைகள், வசூல் தொகை உள்ளிட்ட விபரங்களை, அதிகாரிகள் இணையதளத்தில் அறிய முடியும். கடந்த சில தினங்களாக, பல கடைகளில் தினமும் சராசரியாக இரண்டு முதல் ஐந்து பெட்டிகள் வீதம், கூடுதல் மது வகைகளை வாங்குகின்றனர்.

ஒரு பெட்டியில், 180 மி.லி., உடைய, 48 குவார்ட்டர் பாட்டில் உள்ளன. இதனால் வழக்கத்தை விட மது விற்பனை, 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு தேர்தல் முக்கிய காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மது விற்பனை எவ்வளவு

ஒரு மதுக்கடையில், தினமும் சராசரியாக,3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்கப்படுகின்றன. கடையில் ஏழு நாட்களுக்கான, மது வகைகள் இருப்பு வைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் நேற்று முன்தினம் வரை, 18 லட்சம் பெட்டி பீர், 38 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாகின. இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் விற்பனையானதை விட,10 சதவீதம் அதிகம். கடந்த ஜனவரியில், 51 பெட்டி மது, 24 லட்சம் பெட்டி பீர் விற்பனையாகின. அவை, 2025 ஜனவரியில் முறையே, 48 லட்சம் பெட்டி, 22 லட்சம் பெட்டிகளாக இருந்தன.

Source link