மதுரை: தமிழகத்தின் வளர்ச்சி எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. மத்திய அரசின் அழுத்தங்களை தாண்டி 200 தொகுதி களிலும் தி.மு.க., வெல்வது நிச்சயம்; 200க்கும் மேல் வெல்வது லட்சியம். யாருக்கும் அஞ்ச மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
மதுரை உத்தங்குடியில் தி.மு.க., தென் மண்டல ஓட்டுச் சாவடி முகவர்கள் குழு மாநாடு நேற்று நடந்தது. அமைச்சர் மூர்த்தி வரவேற்றார்.
முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
வீரம், பாசம், கோயில், சாப்பாடு என அனைத்துக்கும் மதுரை ‘பேமஸ்’. இந்த மண்ணில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ மாநாடு நடப்பதும் பெருமை.
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை ஆப் மூலம் 1 கோடியே 10 லட்சம் குடும்பங்களை இணைத்தோம். எஸ்.ஐ.ஆர்., பணியில் தீவிரமாக உழைத்தோம். தமிழகம் முழுவதும் 5.50 லட்சம் பி.எல்.சி., உட்பட 7 லட்சம் முகவர்கள் என்ற வேர்கள் தான் நம் வெற்றியை உறுதி செய்ய உள்ளனர். தற்போது மண்டலம் வாரியாக மாநாடுகளை, மகளிரணியின் வெல்லும் தமிழ் பெண்கள் என 2 மாதங்களில் 7 மாநாடுகளை நடத்தி 9.30 லட்சம் பேரை சந்தித்துள்ளோம்.
திருச்சியில் ‘மெயின் பிக்சர்’ தி.மு.க., போல் ‘பூத் லெவல்’ நிர்வாகிகளை தயார்படுத்தும் கட்சி எதுவுமில்லை. நம்மை சீண்டிப்பார்ப்பவர்களை அஞ்ச வைப்போம். இது வெறும் ‘டிரைலர்’ தான். திருச்சியில் மார்ச் 9ல் நடக்கும் மேற்கு மண்டல மாநாட்டில் ‘மெயின் பிக்சர்’ காட்டுவோம். 10 லட்சம்பேர் பங்கேற்க உள்ளனர்.
தி.மு.க., ‘ரெக்கார்டை’ யாராலும் ‘பிரேக்’ செய்ய முடியாது. இந்த தேர்தலில் தெற்கு மண்டலத்தில் அனைத்து தொகுதி களையும் தட்டித் துாக்க வேண்டும்.
2019 முதல் எல்லா தேர்தல்களிலும் வெற்றிமேல் வெற்றி தான். 2024 லோக்சபா தேர்தலில் முழுமையான வெற்றியை மக்கள் தந்தார்கள். இப்போது அதைவிட அதிக திட்டங்களை ‘சர்பிரைஸ்’ ஆக கொடுத்துள்ளோம். நீங்கள் ஒவ்வொருவரும் 350 ஓட்டுகள் இலக்கு
என செயல்படுங்கள். அப்படி செயல்பட்டால் 2.50 கோடி ஓட்டுக்களை நாம் பெற முடியும். இதை பெற்றுக்கொடுப்பது உங்கள் பொறுப்பு. உங்களுக்கு தேவையானதை செய்து தருவது என் பொறுப்பு. 200 தொகுதிகள் நிச்சயம்; அதற்கும் மேல் பெறுவது நம் லட்சியமாக இருக்க வேண்டும்.
அதற்காக அடுத்த இரண்டு மாதங்கள் நமக்கு ‘நோ ரெஸ்ட்’. ஒவ்வொரு வாக்காளரையும் குறைந்தது ஐந்து முறை நேரில் சந்திக்க வேண்டும். வாட்ஸ் அப், இன்ஸ்டாவை தாண்டி வீடு தோறும் சென்று கும்பிட்டு ஓட்டு கேளுங்கள். ஓட்டுப் பதிவுக்கு கடைசி நிமிடம் வரை மக்களை சந்தியுங்கள். கடைசி ஓட்டு எண்ணப்படும் வரை கவனமாக இருங்கள். இதை ‘ரிபீட் மோட்’ ஆக நீங்கள் செய்தால் தான் ஆட்சியும் நமக்கு ‘ரிபீட்’ ஆகும்.
தேர்தலை காரணமாக வைத்து மகளிர் உரிமைத் தொகையை மத்திய அரசு முடக்க முயன்றதை முறியடித்துள்ளோம். வரும் ஆட்சியில் ரூ.2ஆயிரமாக உயர்த்துவோம். தமிழக வளர்ச்சி எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. தி.மு.க., ஆட்சியில் தொடர்ந்தால் தான் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். மக்களுக்காக கொடுத்தால் அது தமிழக அரசு; மக்களிடமிருந்து எடுத்தால் அது மத்திய அரசு என்பதாகிவிட்டது.
பெண்களுக்கான இலவச பஸ் பயணம் திட்டத்தால் மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணிப்பது குறைந்துவிட்டதாக பிரதமர் மோடி பேசியது வைரலானது. இத்திட்டம் மூலம் பெண்கள் மாதம் ரூ.800 சேமிக்கின்றனர்.
* மோடியிடம் கேளுங்கள் மார்ச் 1 ல் மதுரைக்கு பிரதமர் மோடி வரவுள்ளார். அவரிடம் மதுரை மெட்ரோ எங்கே, தமிழகத்திற்கான சிறப்பு திட்டங்கள் எங்கே, கீழடி அறிக்கை ஏன் வெளியிடவில்லை, நீட் விலக்கு ஏன் தரவில்லை, எய்ம்ஸ் ஏன் இன்னும் வரவில்லை, கல்விக்கான நிதி ஏன் முடக்கி வைத்துள்ளீர்கள் என கேள்வி கேளுங்கள்.
தமிழக நலனுக்காக குரல் கொடுக்க அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு துணிச்சல் இல்லை. ஆட்சியே போனாலும் நான் பயப்பட மாட்டேன். வழக்கு வரும், வரட்டும். மிசா, தடாவையெல்லாம் பார்த்த இயக்கம் தி.மு.க., அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்க சி.பி.ஐ., இ.டி., ஐ.டி., என எதை அனுப்பினாலும் அஞ்ச மாட்டேன்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தி.மு.க., சாதனை திட்டங்களை செயல்படுத்துகிறது. அதனால் தான் 11.2 சதவீதம் வளர்ச்சியை பெற்றுள்ளது. கூட்டணியில் புதிய கட்சிகள் வருகின்றன. தொகுதி பங்கீடு, வேட்பாளர் யார் என்பதை நான் பார்த்துக்கொள்கிறேன். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைப்பது உங்கள் கடமை.
* தமிழகமா, டில்லியா தமிழக அணியா, டில்லி அணியா என்ற போரில் தமிழக அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும். அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்க வைக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க, மாநில சுயாட்சியை மீட்க, தமிழகம் எப்போதும் அமைதியாக இருக்க எல்லோரும் சொல்வோம், வெல்வோம் ஒன்றாக. இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க., தெற்கு மண்டல பொறுப்பாளர் கனிமொழி, மதுரை மண்டல பொறுப்பாளர் தங்கம் தென்னரசு, பொருளாளர் பாலு, அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, தியாகராஜன், எம்.எல்.ஏ., தளபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருமங்கலம் மேம்பாலம் திறப்பு
திருமங்கலம்-கள்ளிக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில்வே கேட் (377) பகுதியில் மேம்பாலம் ரூ.38 கோடியே 81 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதை நேற்று மதுரையிலிருந்தவாறு காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதனால் திருமங்கலத்திலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் நெரிசல் இன்றி பயணிக்க முடியும்.
மருது சகோதரர்கள் சிலை திறப்பு@
@ சிவகங்கையில் ரூ.ஒரு கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்தில் நிறுவப் பட்டுள்ள மருது சகோதரர்கள் சிலையை மதுரையிலிருந்தவாறு காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
