ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7

ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்துள்ளது. அதிரடியாக ஆடிய மில்லர் 63 ரன்னும், பிரேவிஸ் 45 ரன்னும் குவித்தனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், கடந்த முறை பைனலில் தோற்ற தென் ஆப்ரிக்காவும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது.

பரபரப்பாக துவங்கிய இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி சிறப்பாக பந்து வீசியது. தென் ஆப்ரிக்க அணியின் டிகாக் 6 ரன் எடுத்திருந்த போது, 2வது ஓவரிலேயே பும்ரா பந்தில் போல்டானார். தொடர்ந்து கேப்டன் மார்க்ரம் 4 ரன்னில் அர்ஷ்தீப் சிங் பந்தில் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். சிக்சர் அடித்து அமர்க்களப்படுத்திய ரிக்கெல்டன் பும்ரா பந்தில் 7 ரன்னில் அவுட்டானார். ஒரு கட்டத்தில் 20 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்து தென் ஆப்ரிக்கா தடுமாறியது.

அதன்பிறகு, களம் கண்ட மில்லர் மற்றும் பிரேவிஸ் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை விளாசினர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். இதனால், 11.1 ஓவரில் தென் ஆப்ரிக்கா 100 ரன்னை எட்டியது. 29 பந்தில் 45 ரன் விளாசிய பிரேவிஸ் துபே பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இருவரும் சேர்த்து 97 ரன் குவித்தனர். மறுபக்கம் அதிரடியாக ஆடி வந்த மில்லர் 26 பந்தில் அரைசதம் அடித்தார். அவர் 35 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த யான்சென் 2 ரன்னிலும், போஸ் 5 ரன்னிலும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். கடைசியில் ருத்ரதாண்டவம் ஆடிய ஸ்டப்ஸ் 24 பந்தில் 44 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், தென் ஆப்ரிக்க அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பும்ரா நம்பர் ஒன்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக பும்ரா உருவெடுத்துள்ளார். இதுவரையில் அவர் 33 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் அர்ஷ்தீப் சிங் (32 விக்கெட்), அஸ்வின் (32) ஆகியோர் உள்ளனர்.

மைதானத்தில் சுந்தர்பிச்சை

கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கரும் உலகக்கோப்பையை மைதானத்திற்கு எடுத்து வந்தனர்.

இந்தியா திணறல் பேட்டிங்

இந்தியா பேட்டிங் துவக்கிய நிலையில், ரன் எதுவும் எடுக்காமலேயே இஷான் கிஷான் ஆட்டம் இழந்தார். அணி 5 ரன் எடுத்திருந்த நிலையில், திலக் வர்மா ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி பேட்டிங் செய்வதில் தடுமாறி வருகிறது.

Source link