புதுடில்லி:ஆப்கானிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலுக்கு நமது வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில் சொந்த தோல்வியை மறைக்க இந்த தாக்குதல் நடத்தியதாககூறியுள்ளது.
நம் அண்டை நாடான பாக்., அதன் அண்டை நாடான ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும், தெஹ்ரிக் – இ – தலிபான் பாக்., என்ற அமைப்பு, பாகிஸ்தானில் சமீபகாலமாக தற்கொலை படை தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால், இரு நாடுகள் உறவு சுமுகமாக இல்லை.
சமீபத்தில், பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் உள்ள பன்னு மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், அந்நாட்டின் ராணுவத்தின் உயர் அதிகாரிகள் இருவரும், ஐந்து பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். பன்னு மட்டுமின்றி, இமாம் பர்கா, பஜூர் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு ஆப்கனில் உள்ள பயங்கரவாத அமைப்பே காரணம் என, பாக்., குற்றஞ்சாட்டி வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆப்கானிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள நங்கர்ஹார் மற்றும் பக்திகா மாகாணங்களில் உள்ள டி.டி.பி., மற்றும் அதன் கூட்டாளிகளின் பதுங்குக்குழிகளை குறிவைத்து, பாக்., நேற்று முன்தினம் அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், டி.டி.பி., பயங்கரவாதிகள் 28 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கனின் தலிபான் அரசு, இத்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்பட்டதாக குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: ரம்ஜான் மாதத்தில் ஆப்கனில் அப்பாவி குழந்தைகள் மற்றும் பெண்கள் உயிரிழப்பு காரணமான பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. தனது உள்நாட்டு தோல்வியை மறைக்க பாகிஸ்தானின் அடுத்த முயற்சியாகும்.
ஆப்கானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
